கிழவியைத் தூக்கி மனையில் வை...மேலும் 4 சிங்கள வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி!

இலங்கையில் ஈழத் தமிழர்களை சற்றும் இரக்கமில்லாமல் கொன்று குவித்தது இலங்கை ராணுவம்,கடற்படை மற்றும் விமானப்படை. இந்த கொடும் செயல் குறித்து உலகின் பல தரப்பிலும் கடும் எதி்ர்ப்புகள், கண்டனங்கள் எழுந்தன. ஆனால் இதையெல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு தன் பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது சிங்கள அரசு.
உலக நாடுகள் மத்தியில் இலங்கை இழிபொருளாக மாறியுள்ள நிலையில் மத்திய அரசின் கண்களுக்கு மட்டும் தங்கமாகவும், வைரமாகவும், வைடூரியமாகவும் காட்சி அளிக்கிறது. காரணம், 'சீனத்துப் பொம்மை' குறித்த பீதிதான்.
இதனால் சிங்களத்து படையினரைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பயிற்சி கொடுத்து பட்டை தீட்டி அனுப்பி வருகிறது ஏ.கே.ஆண்டனி வசம் இருக்கும் மத்திய பாதுகாப்புத் துறை.
அதிலும் இவர்கள் அத்தனை பேரையும் மறக்காமல் தமிழகத்துக்கே அனுப்பி தமிழக மக்களின் உணர்வுகளை கேலிக்கூத்தாகிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இதுதான் அனைவரிடத்திலும் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழக மக்கள் ஏற்கனவே ஈழத் தமிழர்களின் கொடூர உயிரிழப்பால் மனதளவில் வருத்தமடைந்துள்ளனர் என்று மத்திய அரசுக்குத் தெரிந்திருந்தும், அவர்களைக் கொன்று குவித்த படையினருக்கு ராஜ உபச்சாரம் தருவது, அதிலும் தமிழ்நாட்டுக்கே வரவழைத்து சாப்பாட்டு போட்டுக் கவனிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
சமீபத்தில் கூட அடுத்தடுத்து இரண்டு முறை இதேபோன்ற நிகழ்வுகள் நடந்தன. தமிழகத்தில் ஏற்பட்ட கட்சி பாகுபாடற்ற எதிர்ப்புகள் காரணமாக மத்திய அரசு இவர்களை அவசரம் அவசரமாக வெளியேற்றி பெங்களூருக்கு அனுப்பி விட்டது.
மத்திய அரசின் இந்த செயல் தமிழ்நாடு வேறு, இந்தியா வேறு என்று மத்திய அரசே சொல்வது போல உள்ளதாக அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல், பொதுமக்களும் கூட கருதுகிறார்கள். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் சிங்களப் படையினருக்குப் பயிற்சி தரக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் வழக்கம் போல இதற்கும் மத்திய அரசிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த விமானப் படை அதிகாரிகள் 4 பேர் என்ஜின் ஃபில்டர் படிப்பு தொடர்பாக மேற்கு வங்கத்துக்கு போயுள்ளனராம். அங்கு நவம்பர் 23ம் தேதி வரை அவர்கள் பயிற்சி பெறவுள்ளனராம்.
அவர்களது பெயர்கள் - 33 வயது புரபல் சியோன், 25 வயது ஜெகத் சந்திரகுமார், 33 வயது சரக சமீ்ரா, 28 வயது பின்ன கோடகே நிலந்தா.
இவர்களுக்கு கொல்கத்தா அருகே உள்ள பரக்பூர் என்ற இடத்தில் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. எந்தவிதத் தடையும் இல்லாமல் இவர்கள் இங்கு பயிற்சி எடுக்க விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்கத்திலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications