காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது: சீமான் பேச்சு
வந்தவாசி: தமிழகத்திற்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு, நெய்வேலியில் இருந்து அளிக்கப்படும் மின்சாரத்தை அளிக்க கூடாது என்று தமிழக அரசிற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது தமிழகத்தில் காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு, நெய்வேலியில் இருந்து மின்சாரம் தர மறுக்க வேண்டும் என்று சீமான் பேசினார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கச்சத்தீவு எங்கள் பாட்டன் சேதுபதி அரசுக்கு சொந்தமானது. ஆனால் அதை தமிழனை கேட்காமல், இலங்கைக்கு கொடுக்கிறது இந்திய அரசு. இதை தட்டிக் கேட்டால் பிரிவினைவாதம் என்றும், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக பேசுவதாகவும் கூறி சிறையில் அடைக்கிறது.
இலங்கையுடன் நட்பை வளர்த்து கொள்ள கச்சத்தீவை தூக்கி இலங்கைக்குக் கொடுப்பதை எதிர்க்கும் நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர்.
தமிழகத்தை சுற்றிலும் உள்ள மற்ற மாநிலங்களில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் ஆகியவை ஆட்சியில் இருந்தாலும், அக்கட்சியினர் அந்தந்த மாநிலங்களின் உரிமைகளை காக்காகவும், மாநில மக்களின் உணர்வுகளை மதிக்கவும் செய்யும், மாநிலக் கட்சிகளாகவே ஆட்சி செய்கின்றன.
ஆனால் தமிழகத்தில் மாநிலக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும், தேச ஒற்றுமையை குறித்து பேசி கொண்டு, தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை கண்டும், காணாதது போல நடந்து கொள்கின்றன. இதுவே முல்லைப் பெரியாறு முதல் காவிரி வரை உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்கும், கச்சத்தீவு பறிபோனதற்கும் காரணம்.
இலங்கையில் இந்திய அரசின் துணையோடு தமிழினத்தை சிங்கள அரசு படுகொலை செய்ததை கூட தடுத்து நிறுத்த முடியாததற்கும் இதுவே காரணம். தமிழகத்தில் 8 கோடி தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இல்லாததும் ஒரு காரணமாகும்.
தமிழர்கள் மதம், சாதி என்ற பெயர்களால் பிளவுண்டு கிடந்த காரணத்தால், நம்மை ஆண்ட கட்சிகள் தமிழின உணர்வற்று, டெல்லியின் அடிமையாக இருந்தன. இதனால் இலங்கையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாவில்லை.
தமிழகத்தில் உரிமைகள் காக்கப்பட வேண்டும். தமிழினத்தின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்றால், தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலர வேண்டும். அதற்கு சாதி, மத பேதங்களை நீக்கிவிட்டு, மொத்த தமிழரும் சேர்ந்து ஒரே தமிழரை ஆதரிக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் பறிபோகும் தமிழக உரிமைகள் காக்கப்பட, தமிழகத்திற்கு மாநில சுயாட்சி வேண்டும். அது நிறைவேற வேண்டுமானால் இந்தியாவில் உண்மையான கூட்டாட்சி மலர வேண்டும்.
கூட்டாட்சி என்றால் கூட்டணி ஆட்சி அல்ல. அது அரசியல் மற்றும் பதவி பேரத்திற்கு ஆனது. நாம் வலியுறுத்துவது கூட்டாட்சி. அது ஏற்பட வேண்டுமானால் காங்கிரஸ் அல்லது பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையிலான ஆட்சி அமைவது தடுக்கபட வேண்டும்.
அதை தடுக்க முதலில் தமிழகத்தில் இருந்து மேற்கண்ட 2 கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலில் முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தின் உரிமைகளை காப்பாற்றும் கட்சிகளே ஆட்சிக்கு வர வேண்டும். அப்போது டெல்லியில் உண்மையான கூட்டாட்சி மலரும். அப்படிப்பட்ட கூட்டாட்சியில் தான் அந்தந்த மாநிலங்களின் உரிமைகள் முழுமையாக கிடைக்கும்.
தமிழினத்தை அழித்தொழித்த இலங்கை அரசுக்கு ஆதரவு தந்ததற்கு காரணமாக, இந்தியாவின் தென் பகுதியின் பாதுகாப்பு கருதியே என்று இந்திய மத்திய அரசு கூறியது. ஆனால் தமிழினம் அழித்து ஒழிக்கப்பட்டு போர் முடிவுற்ற இந்த 2 ஆண்டுகளில் சீனாவும், பாகிஸ்தானும் வலிமையாக கால் ஊன்றிவிட்டன.
இலங்கையுடன் நட்பை ஏற்படுத்தி கொள்ள தூக்கி கொடுத்த கச்சத் தீவில் சீனாவின் கடற்படை காலூன்றி உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. இது தான் இலங்கையுடன் நட்பு கொண்டதற்கு கிடைத்த பரிசு.
நமது நாட்டின் மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களை கொன்று அழித்த இலங்கையை நட்பு நாடு என்று இன்று வரை பேசிக் கொண்டிருக்கிறது டெல்லி அரசு. அதனுடன் கூட்டணி அமைத்து கொண்டு, ஆட்சியில் பங்கேற்று கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமை பற்றிப் பேசுகிறது திமுக. இந்த ஏமாற்று அரசியலை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications