நீதிபதி நியமனத்தை எதிர்த்த சசி வழக்கு: கர்நாடக சட்டத்துறை செயலாளருக்கு ஹைகோர்ட் அவசர நோட்டீஸ்
பெங்களூர்: முதல்வர் ஜெயலலிதா, தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா சார்பில் தொடரப்பபட்ட வழக்கில் கர்நாடக சட்டத்துறைச் செயலாளருக்கு அவசர நோட்டீஸ் அனுப்பி பெங்களூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், தனி நீதிமன்ற நீதிபதியாக மல்லிகார்ஜுனய்யா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதே நீதிமன்றத்தில் சசிகலா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த மல்லிகார்ஜுனய்யா மனுவை தள்ளுபடி செய்தார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர்.
மல்லிகார்ஜுனய்யா தனி நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கான அரசாணையோ அல்லது அரசு அறிவிக்கையையோ காட்ட வேண்டும் என்றும், அவரது நியமனம் செல்லாது என்று உத்தரவிடக் கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்தான கவுடா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சட்டத்துறைச் செயலாளர், உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல், லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம், உச்ச நீதிமன்ற தலைமை அதிகாரி ஆகியோருக்கு அவசர நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
மேலும் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியே இந்த வழக்கு தமிழகத்தில் இருந்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications