கூடங்குளம் அணு மின் திட்டத்தை இயற்கையோடு இணைந்த திட்டமாக்குக: முதல்வருக்கு போராட்டக்குழு கடிதம்
நெல்லை: கூடங்குளம் அணு மின் திட்டத்தை இயற்கையோடு இணைந்த திட்டமாக்குமாறு அணு உலை எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்ளிட்டோர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணு மின் திட்டத்திற்கு எதிரான எங்களது போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. தற்போது தங்களுடன் புதிய பேச்சுவார்த்தை ஒன்றை தொடங்க விரும்புகிறோம். மத்திய அரசும், இந்திய அணு சக்தி துறையும் கூடங்குளம் அணு மின் திட்டம் தொடர்பான எந்த அடிப்படை தகவலையும் எங்களுடன் பகிர்ந்துகொள்ள முன் வரவில்லை. மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்ட பிறகும் கூட வளாக மதிப்பீடு அறிக்கை, பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கை போன்றவற்றை அவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை.
நன்னீர் பற்றாக்குறை, அணு உலையின் வடிவமைப்பில் மாற்றம், திரவ-திடக் கழிவுகள் மேலாண்மை போன்றவை மீதான எங்களின் அச்சம் குறித்த கருத்துக்களையும் அவர்கள் கேட்கவில்லை. மேலும் ரஷ்ய அரசு அல்லது நிறுவனத்திடம் இழப்பீடு தொடர்பான உறுதிமொழி எதுவும் பெறப்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை.
கடந்த 2008ல் இந்திய அரசும், ரஷ்ய அரசும் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தம் குறித்தும் மத்திய அரசு எங்களுடன் பகிர்ந்துகொள்ள முன்வரவில்லை. இந்நிலையில் கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும் எதிரானது ஆகும்.
கூடங்குளம் அணுமின் நிலைய மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் என்று தாங்கள், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளீர்கள். அதற்கு முன்பு மத்திய தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரமும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மின்உற்பத்தி திட்டங்களுக்கு நிதியுதவியும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தீர்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தங்களது நியாயமான கோரிக்கையை எப்போதும் புறக்கணித்தே வருகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா, அதன் நதிநீரை தமிழகத்திற்கு தர மறுக்கிறது. ஆனால் தமிழக மக்கள் அணு மற்றும் அனல் மின் நிலைய கழிவு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு தூய்மையான மின்சாரத்தை வழங்கி வருகின்றனர்.
கூடங்குளத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை கேரளா கேட்கிறது. அப்படியானால் கூடங்குளத்தில் அமையவுள்ள 3 மற்றும் 4வது அணு உலைகளை கேரளத்தில் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளலாமே? ஆனால் கேரள மக்களும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது வெளி நாடுகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பணிந்து சேவை செய்வதிலே ஆர்வம் காட்டுகிறது. எனவே கூடங்குளம் அணு மின் திட்டத்தை மக்களுக்கு உகந்த இயற்கையோடு இணைந்த திட்டமாக மாற்றவும், மாநிலம் முழுவதும் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டங்களை கொண்டு வரவும், மின்சாரத்தை கொண்டு செல்லுதல் மற்றும் பகிர்மான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications