For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செய்தியாளர்கள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு வைகோ கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: கிரானைட் முறைகேட்டை அம்பலப்படுத்தியதற்காக புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தியாளர்ளைத் தாக்க முயன்றது, சென்னை ஐஐடியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டின் புகைப்படக் கலைஞரை தாக்கியது ஆகிய சம்பவங்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மதுரை மாவட்டத்தில்,கிரானைட் கற்களை சட்டவிரோதமாகவும், அனுமதி இல்லாமலும் வெட்டி எடுத்து, பொதுச்சொத்துகளைக் கபளீகரம் செய்து, பல்லாயிரம் கோடி கொள்ளை நடத்திய ஊழல் தற்போது அம்பலத்துக்கு வந்து விட்டதால், அதுபற்றிய உண்மை விவரங்களை, தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஆக்கியதற்காக, அதன் தென் மண்டலப் பொறுப்பாளர் இராமானுஜம் அவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியதுடன், தாக்கவும் முயன்று உள்ளனர். இதுகுறித்து, அவர், மதுரை மாவட்ட ஆட்சியரிடமும், மதுரை மாநகர காவல்துறை ஆணையாளரிடமும், புகார் கொடுத்து உள்ளார்.

அதேபோன்று, திருநீர்மலை அருகே, கிரானைட் கனிம வளங்களை வெட்டி எடுப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டு வர முயன்றதால், அதே தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மகாலிங்கம் புகைப்படக் கலைஞர் எர்னஸ்ட் ராஜா ஆகியோரை, குண்டர்கள் தாக்க முயன்று அச்சுறுத்தியதால், அவர்களும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.

சென்னை ஐ.ஐ.டி. யில், ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட செய்தியில், உண்மையைக் கண்டு அறியச் சென்று, படம் எடுக்க முயன்ற, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஏட்டின் புகைப்படக் கலைஞர் ஆல்வின் மேத்யூ என்பவரை, ஐ.ஐ.டி.நிர்வாகத்தினர் தாக்கி இருக்கின்றார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார்.

அநீதி நடந்தால், ஊழல் நடந்தால், அதை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வரவே, செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் கடமை ஆற்றுகின்றன. அத்தகைய ஊடகங்களின் செய்தியாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், வன்முறையாளர் கூட்டத்தின் தாக்குதலுக்கு ஆளாவதும், ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

இத்தகைய போக்கைத் தடுக்கின்ற வகையில், ஊடகங்களை, செய்தியாளர்களை அச்சுறுத்தி மிரட்டுவோர், வன்முறையில் ஈடுபடுவோர் மீது, காவல்துறை கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; செய்தியாளர்களுக்குத் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அதில் வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK leader vaiko has condemned the attack on media persons in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X