நெல்லையில் பணியில் இருந்து பைக்கில் வீடு திரும்பியபோது விபத்து: எஸ்.ஐ., ஏட்டு பலி
நெல்லை: வீரவநல்லூரில் பைக்குகள் மோதிக் கொண்டதில் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோர் பலியாகினர்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அண்ணா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். அவர் புளியங்குடியில் ஏட்டாக பணியாற்றி வந்தார். விக்கிரமசிங்கபுரம் ஆறுமுகப்பட்டியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். அவர் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். மாரியப்பனும், தங்கபாண்டியனும் நெல்லை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்து வந்த காவலர் தகுதித் தேர்வு பணிக்கு சென்றுவிட்டு நேற்று மதியம் பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வீரவநல்லூர் தனியார் மில் அருகே சென்றபோது அம்பாசமுத்திரத்தில் இருந்து சேரன்மகாதேவி நோக்கி வந்த பைக் ஒன்று அவர்கள் வந்த பைக் மீது மோதியது. இதில் மாரியப்பன், தங்கபாண்டியன், இன்னொரு பைக்கில் வந்த சேரன்மகாதேவி புதுகிராமத்தைச் சேர்ந்த கருத்தபாண்டி ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரியப்பன் இறந்தார். தங்கபாண்டியன், கருத்தபாண்டி ஆகிய இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் தங்கபாண்டி இறந்தார்.
இது குறித்து வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி விசாரணை நடத்தி வருகிறார். ஏட்டு மாரியப்பனுக்கு தங்கம் என்ற மனைவியும், சுஹாசினி என்ற மகளும், பரத் என்ற மகனும் உள்ளனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியனுக்கு தமிழரசி என்ற மனைவியும், சுதா, உமாதேவி, உமாமகேஸ்வரி, ஜெயபாக்யம் ஆகிய மகள்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications