For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேளாங்கண்ணி பேராலய திருவிழா: இன்று கொடியேற்றம் - பக்தர்கள் குவிந்தனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாகப்பட்டிணம்: பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித அரோக்கியமாதா ஆலயத்தில் திருவிழாவை தொடங்கியுள்ளதை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெரு விழா ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும். இதற்கான கொடியேற்றம் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் திருக்கொடியை புனிதம் செய்து வைக்கிறார்.

புனிதம் செய்யப்பட்ட கொடி வேளாங்கண்ணி கடைத் தெரு, ஆரிய நாட்டு தெரு, கடற்கரை சாலை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொடிக் கம்பத்தில் ஏற்றப்படுகிறது. கொடி ஏற்றப்பட்ட பின்னர் பேராலய கலை அரங்கில் மாதா மன்றாட்டு ஆராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

விழாவில் பங்கேற்கவும் பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்துவதற்காகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் வந்து குவிந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்குள்ள அனைத்து விடுதிகள் நிரம்பிவிட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கடற்கரையோரம், பேராலய வளாகம் உள்ளிட்ட இடங்களில் திறந்த வெளியில் தங்கியுள்ளனர். விழாவையொட்டி வேளாங்கண்ணிக்கு இயக்கப்பட்டு வரும் அனைத்து பஸ்களிலும் நேற்று அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. பேராலய திருவிழா கொடியேற்றத்தை காண பல்லாயிரகணக்கில் பக்தர்கள் குழுமியிருப்பதால் வேளாங்கண்ணி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

செப்டம்பர் 7 -ந் தேதி மாலை 6 மணிக்கு பெரிய தேர் பவனி நடைபெறுகிறது. செப்டம்பர் 8 ம் தேதி மாதா பிறந்த நாளையொட்டி காலை 6 மணிக்கு இந்தியாவிற்கான திருத்தந்தை தூதர் டாக்டர்.சால்வத்தோரே மென்னாக்கியோ, தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படும்.

மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு ஆண்டு பெருவிழா நிறைவடைகிறது. பின்னர் பேராலய கீழ் கோவிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமர் தலைமையில் 1,100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருட்டு, மற்றும் வழிப்பறி சம்பவம் நடைபெறாமல் தடுக்க போலீசார் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி கண்காணித்து வருகிறார்கள்.

English summary
The Nagai district administration has geared up for the 11-day annual Velankanni festival slated to commence on August 29 with the flag hoisting and conclude on September 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X