கஸ்தூரிபா மருத்துவமனையில் எலிகளுக்கு விஷம்: ஓடியோடி செத்த எலிகளைப் பொறுக்கும் பணியாளர்கள்
சென்னை: இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவத்தையடுத்து கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் நடத்தப்பட்ட வேட்டையில் 16 நாய்கள், 1 பூனை சிக்கியது. மேலும் தக்காளியில் விஷம் வைத்து 30 எலிகள் கொள்ளப்பட்டது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இறந்த குழந்தையை எலி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 2 மருத்துவர்கள் உள்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் நடமாடும் உணவகங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தடைவிதித்தார். மேலும் அரசு மருத்துவமனைகளில் உள்ள எலிகளைப் இருளர் இனத்தவரை வைத்து பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் புளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து கஸ்தூரிபா மருத்துவமனையில் திரிந்த 16 நாய்கள், ஒரு பூனையை பிடித்தனர்.
இது தவிர மருத்துவமனையில் ஆங்காங்கே விஷம் கலந்த தக்காளி வைக்கப்பட்டதில் 30 எலிகள் செத்துக் கிடந்தன. மேலும் எலிப் பொந்துகள் உள்ள பகுதிகளில் விஷம் வைக்கப்பட்டதையடு்த்து அங்கிருந்த எலிகள் குவியல், குவியலாக வெளியே வந்து செத்துக் கிடந்தன. எலிப் பொந்துகள் அதிகமுள்ள 7வது வார்டில் ஏராளமான எலிகள் செத்துக் கிடந்தன.
செத்த எலிகளை சுகாதாரப் பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். எலிகளைக் கொல்லும் பணி இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications