சிவசேனை கவுன்சிலர் கொலை வழக்கில் 'தாதா' அருண் காவ்லிக்கு ஆயுள் தண்டனை
மும்பை: சிவசேனைக் கட்சியின் முக்கியத் தலைவரும் மும்பை கவுன்சிலருமான கம்லாகர் ஜாம்சந்தேகர் கொலை வழக்கில், முன்னாள் தாதா அருண் காவ்லிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநில சிவசேனைக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவரான கம்லாகர் ஜாம்சந்தேகர் கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்வதற்காக காவ்லியின் கூலிப்படையினருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது உறுதியானது.
இது தொடர்பாக பிரபல ரவுடியாக இருந்து அரசியல்வாதியான அருண் காவ்லி 2008ம் ஆண்டு மே மாதம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
அகில பாரதிய சேனை சார்பில் 2004ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவான அருண் காவ்லி கைது செய்யப்பட்டது முதல் சிறையில் தான் உள்ளார்.
இந்தக் கொலை தொடர்பான வழக்கு, மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றச் சம்பவங்கள் தடுப்புச் சட்ட (எம்சிஓசிஏ) நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அருண் காவ்லியும் மேலும் 11 கூலிப் படையினரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவர்களுக்கான தண்டனையை நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதில், அருண் காவ்லிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பாலா சுருவே வழக்கு விசாரணையின் போதே இறந்து விட்டார்.
ரியல் எஸ்டேட் விவகாரத்தில் சகேப்ராவ் பின்டடே, பாலா சுருவே ஆகிய இருவரும் கம்லாகர் ஜாம்சந்தேகரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டி, அருண் காவ்லிக்கு ரூ. 30 லட்சம் தந்துள்ளனர்.
இதையடுத்து தனது கூலிப் படையை வைத்து அவரை காவ்லி சுட்டுக் கொன்றார்.












Click it and Unblock the Notifications