குஜராத் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழக விமானப்படை வீரர் பலி!

குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானப்படை ஹெலிகாப்டர்கள் இரண்டு நடுவானில் நேருக்கு நேர் மோதிச் சிதறியதில் அவற்றில் இருந்த 9 வீரர்களும் பலியாகினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் முருகனும் அடக்கம்.
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை சாலை அருகே உள்ள பழனியப்பா நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முருகன் (39). அவர், கடந்த 1990ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்தார். விமானப்படை வீரராக பணியில் சேர்ந்த அவர் பதவி உயர்வு பெற்று ஜூனியர் வாரன்ட் ஆபீசராக அஸ்ஸாம் மாநிலம் மோகன்வாடாவில் பணியாற்றி வந்தார்.
அவர் அங்குள்ள ராணுவ குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந் நிலையில் கடந்த மாதம் வருடாந்திர பயிற்சிக்காக குஜராத்தில் உள்ள அகமதாபாத் பிரிவுக்கு தனது குழுவுடன் முருகன் சென்றிருந்தார். நேற்று, அங்கு பயிற்சி மேற்கொண்டபோது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முருகனுக்கு, சிவகாம சுந்தரி என்ற மனைவியும், ஜெயபிரகாஷ்(11), ஆகாஷ் கார்த்திக் (10) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications