போன ஆட்சியில் திமுகவினர் ஆடாத ஆட்டம் ஆடினர் - விஜயகாந்த்

காஞ்சீபுரத்தில் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் ஏழை நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசியது:
பட்டு நெசவிற்கு புகழ் பெற்ற காஞ்சி நகரில் இப்போது தொழில் நசிந்து நெசவாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதுவரை 30 மாவட்டங்களில் எங்களால் இயன்ற அளவுக்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளோம்.
ஆனால் அரசு எங்கள் மீது அவதூறு வழக்குகளை போடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது. இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். என்னுடைய மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயமில்லை.
வரிப்பணத்தில் இலவசங்கள்...
அ.தி.மு.க. அரசு மக்களின் வரிப்பணத்தில் தான் இலவசங்களை தருகிறது. ஆனால் தே.மு.தி.க. தொண்டன் தனது சொந்த பணத்தில் மக்களுக்கு உதவிகளை செய்கிறார்கள். அப்படி உதவி செய்யும் தொண்டர்களை நான் வணங்குகிறேன்.
நெசவாளர்களின் நலனுக்காக அரசு 540 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறுகிறது. ஆனால் நெசவாளர்களும், நெசவு தொழிலும் நலிவடைந்து தான் உள்ளனர்.
ஆடாத ஆட்டம்...
கடந்த கால ஆட்சியில் தி.மு.க.வினர் ஆடாத ஆட்டம் ஆடினார்கள். மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டினர். எனவே மக்களை நான் தெய்வமாக நினைக்கிறேன். தமிழகம் எங்கும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதற்கு பின்னால் ஒரு மாபியா கும்பலே உள்ளது.
காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளை மழை வந்தால் மறந்து விடுகிறார்களே தவிர நிரந்தரமாக இப்பிரச்சினைகளை தீர்க்க வழிவகை காணவில்லை. காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர் பிரச்சினை போன்றவைகளை தீர்ப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் அவர்களின் பின்னால் நான் வரத்தயார்.
காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், கால்நடை மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவ உட்கட்ட மைப்பு வசதி இல்லை. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுங்கள்," என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications