கொடைக்கானலில் திருமணமான அடுத்த நாளே தம்பதி மர்மசாவு-பூட்டிய அறையில் இறந்து கிடந்தனர்
கொடைக்கானல்: கொடைக்கானலில் திருமணமான அடுத்த நாளே தம்பதி பூட்டிய அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த கவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் கமலஹாசனுக்கும்(28), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மகள் லோகேஸ்வரிக்கும், கடந்த 29ம் தேதி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
குடும்ப சம்பிரதாயபடி திருமணம் முடிந்த அன்று இரவு புதுமண தம்பதியரை கோவிந்தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மறுநாள் (கடந்த 30ம் தேதி) திருமண வீட்டில் விருந்து நடைபெற்றது.
விருந்து முடிந்த நிலையில் அன்றிரவு புதுமண தம்பதிக்கு ஒதுக்கப்பட்ட தனியறைக்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் நீண்டநேரமாகியும் புதுமண தம்பதியர் சென்ற தனியறை திறக்கப்படவில்லை. கதவை தட்டி பார்த்தும் எந்த சத்தமும் இல்லை.
பொறுமை இழந்த கோவிந்தன் மற்றும் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது புதுமண தம்பதி வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். கொடைக்கானலில் தற்போது நிலவி வரும் கடும் குளிரை போக்கும் வகையில், வீட்டிற்குள் புகை போடப்பட்டதில், இருவரும் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருமணம் முடிந்த அடுத்த நாளே புதுமண தம்பதி, மர்மமான முறையில் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications