போலீசாரின் வீட்டுமனைகளையே மிரட்டி வாங்கிய பி.ஆர்.பி.
மதுரை: கிரானைட் குவாரி முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. நிறுவனத்தார் பற்றி மதுரை எஸ்.பி.யிடம் போலீசாரே புகார் கொடுத்த கொடுமை நடந்துள்ளது.
மதுரையில் கிரானைட் குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க ஏராளமானோர் குவிந்தனர். எஸ்.பி. பாலகிருஷ்ணன் மனுக்களை பெற்றார். நேற்று மட்டும் 12 போலீசார், குண்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த 32 பேர் உள்பட மொத்தம் 75 பேர் மனு அளித்தனர்.
போலீசார் அளித்த புகார் மனுவில், மதுரை அருகே புதுதாமரைப்பட்டி சாலையில் 2001ம் ஆண்டில் அப்போதைய மாநகர போலீஸ் கமிஷனர் ஜங்கீட் போலீசாருக்கு வீட்டு மனை பட்டா வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் காதாக்கிணறு, புதுதாமரைப்பட்டி, நாகமலை புதுக்கோட்டை ஆகிய 3 இடங்களில் போலீசாருக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. புதுதாமரைப்பட்டியில் 14.5 ஏக்கர் நிலத்தில் 250 போலீசாருக்கு வீட்டு மனை நிலமாக தலா ரூ.35,000க்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தையொட்டி பிஆர்பி நிறுவன கிரானைட் குவாரி இருந்தது.
குவாரியிலிருந்து அள்ளிய மணலை போலீசாரின் வீட்டு மனை பகுதியில் குவித்து ஆக்கிரமித்தனர். இதைத் தட்டி கேட்டபோது இடத்தை கேட்ட விலைக்கு கொடுத்து விடுமாறு பிஆர்பி நிறுவனத்தினர் மிரட்டினர். வேறு வழியின்றி 200 வீ்ட்டுமனைகளை பிஆர்பி கேட்ட விலைக்கு 2008ல் விற்றோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
புகார் பெற வேண்டிய போலீசாரே புகார் செய்த கொடுமை:
கிரானைட் நிறுவன அதிபர்கள் தங்களை மிரட்டி பிளாட்டுளை பறித்துக் கொண்டனர் என எஸ்.பி.யிடம் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் மாரிமுத்து புகார் மனு அளித்தார். அவர் கூறுகையில், 2001ல் வாங்கிய நிலத்தில் 4க்கும் மேற்பட்ட போலீசார் வீடுகட்டி குடியிருந்தனர். குவாரியில் இருந்து தோண்டி எடு்க்கப்பட்ட மண்ணை குவித்ததால் மீதமுள்ளவர்களால் வீடு கட்ட முடியாமல் போனது. அப்பகுதியில் வீடு கட்டி வசித்து வந்த சிறப்பு எஸ்ஐ மனோகரன் கல்குவாரிக்கு வைத்த வெடி அதிர்வில் வீடு இடிந்து பலியானார். பிஆர்பி நிறுவன அடியாட்களின் மிரட்டலுக்கு பயந்து கேட்ட விலைக்கு நாங்கள் பிளாட்டை விற்றோம். 2001ல் ரூ.35,000க்கு வாங்கிய பிளாட்டை 2008ல் ரூ.40,000 முதல் ரூ.50,000க்கு விற்றோம் என்றார்.
மதி்ச்சியம் எஸ்.ஐ. சந்தனமாரிமுத்து கூறுகையில், வீடுகட்ட எனக்கு ஒதுக்கிய நிலத்தில் குவாரி மண்ணை கொட்டினர். தட்டிக்கேட்ட போது அடியாட்களை வைத்து மிரட்டினர். வேறு வழியின்றி அவர்கள் கேட்டவிலைக்கு எனது வீட்டுமனையை கொடு்த்தேன் என்றார்.
புகார் பெற வேண்டிய போலீசாரே எஸ்பியிடம் புகார் அளித்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குண்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி கூறுகையில், வீட்டு மனை மோசடி குறித்து எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தபோது எங்களை 3 கார்களில் வந்த பிஆர்பி நிறுவனத்தினர் தடுக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி்த்து வந்து மனு கொடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications