சேது கால்வாய் திட்டம்: மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க 6 வார கால அவகாசம்
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே. பச்சௌரியின் அறிக்கை மீதான நிலையைத் தெரிவிக்க மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அவகாசத்தை மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
சேது சமுத்திர திட்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்.எல். தட்டூ, சந்திரமௌலி குமார் பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் நாரிமன், வல்லுநர் குழு அறிக்கையை மத்திய அமைச்சரவை இன்னும் பரிசீலித்து முடிவு செய்யவில்லை. ஆகையால் பதிலைத் தாக்கல் செய்ய 8 வார அவகாசம் அளிக்க வேண்டும் என்றார். ஆனால் இதை நிராகரித்த நீதிபதிகள், ஆறு வாரங்களுக்குள் மத்திய அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
வழக்கு என்ன?
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 2007-ம் ஆண்டில் சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்க மறுத்தது. இதையடுத்து, சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் ஆறாவது வழித்தடத்தில் "ராமர் பாலம்' இருப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர். அதனால் அப்பகுதியை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும்' என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தல் தனித்தனியாக 2007-ல் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாற்று வழியில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளதா என்றும் இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுமா என்பதைக் கண்டறியவும் சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே. பச்சௌரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைக்க 2008-ல் உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்த பச்சௌரி குழு, கடந்த ஜூலை மாதம் 2-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதன் 37 பக்க அறிக்கையில், "மாற்று வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவது பொருளாதார, சுற்றுச்சூழல் ரீதியாக சாத்தியமில்லை' என்று கூறப்பட்டிருந்தது. அதையடுத்து, பச்சௌரி குழு அறிக்கை மீது முடிவு செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இரண்டு மாத கெடு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது மேலும் 6 வார கால அவகாசம் பெற்றிருக்கிறது மத்திய அரசு.












Click it and Unblock the Notifications