ஒலியை விட்டு ஒளிக்கு மாறியதால் பெருகும் பட்டாசு விபத்துகள்!

சிவகாசியில் நடைபெறும் பெரும்பாலான விபத்துக்களுக்குக் காரணம் இதுபோன்ற வர்ணஜாலம் நிகழ்த்தும் பேன்ஸி ரக பட்டாசுகளை தயாரிக்கும் ஆலைகள்தான் என்கின்றனர் நிபுணர்கள். சரியான பயிற்சியில்லாத தொழிலாளர்களைக் கொண்டு பொட்டாசியம் குளோரேட், சல்பர், கரிமருந்து போன்றவைகளின் கலவைகளை சரியான விகிதத்தில் கலக்காமல் அவசரகதியில் வேலை செய்வதே விபத்திற்கு காரணம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில்தான் பேன்சிரக பட்டாசுகள் எனப்படும் வர்ணஜால பட்டாசுகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த பட்டாசுகள் அதிக விலை கொண்டவை. இவற்றை சிவகாசியில் தயாரித்தால் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற ஆசையில் கடந்த சில ஆண்டுகளாக இங்கு பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்து வருகின்றனர்.
சரியான பாதுகாப்பு வசதியில்லாத தொழிற்சாலைகள், சல்பரும், பொட்டாசியம் குளோரைடும் கலந்த கலவையை கைகளில் எடுத்துப்போட்டு அவற்றை இடிக்கும் போது ஏற்படும் உராய்வில் வெடித்து தீ விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சரியான தற்காப்பு நடவடிக்கைகள் எதுவும் தொழிற்சாலைகளில் செய்யப்படவில்லை. மேலும் தொழிலாளர்களுக்கு ரப்பர் கை உறைகளை அளிக்கவேண்டும் என்பது விதி ஆனால் எந்த தொழிற்சாலைகளில் அது பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை.
ஆண்டிற்கு பலகோடி ரூபாய் சம்பாதித்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கு சரியான குடிநீர் வசதியோ, கழிவறை வசதியோ கூட செய்து தராத தொழிற்சாலைகள்தான் அதிகம் உள்ளன.
சிவகாசி நகரைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் உள்ள பெரும்பாலான பட்டாசு தொழிற்சாலைகள் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படுகின்றன. இதன் காரணமாக விபத்து நேரிடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
தமிழ்நாட்டில் பொட்டாசியம் குளேரேட் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வெள்ளைப் உப்பு என்ற பெயரில் தடையின்றி இதனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் ஆபத்தை அறியாமல் இதனுடன் கந்தகம், கரிமருந்து போன்ற கலவைகளை கலக்குவதாலேயே அழுத்தம் தாங்காமல் வெடிவிபத்து நேரிடுகிறது என்கின்றனர் ரசாயன வல்லுநர்கள்.
வெடிக்கும் பட்டாசுகளை தயாரிப்பதை விடுத்து பணத்திற்கு ஆசைப்பட்டு கண்ணைக் கவரும் ஒளிமயமான பட்டாசுகளை தயாரிக்க கிளம்பியதனாலேயே இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நேரிடுவதாக குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள். அரசின் நடவடிக்கை கடுமையான இருந்தால் மட்டுமே அப்பாவி உயிர்கள் பலியாவதை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications