மக்கள் மீது உண்மையில் அக்கறை இருக்கா? டீசல் விலையை திரும்பப் பெறுக: ஜெயலலிதா

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
விஷம்போல் ஏறும் விலைவாசி'', "வரலாறு காணாத பணவீக்கம்'', "வீழ்ச்சியடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு'' ஆகியவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போது அறிவித்து வந்தாலும், இதற்கு முற்றிலும் மாறான வகையில், விலைவாசி கட்டுக்கடங்காமல் போகும் அளவுக்கு அவ்வப்போது பெட்ரோலிய பொருட்களின் விலையினை உயர்த்துவதை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது. இதைப்பார்க்கும் போது, "படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில்'' என்ற பழமொழி தான் நினைவிற்கு வருகிறது. அந்த வகையில், தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, நள்ளிரவு முதல் டீசல் விலையினை வரலாறு காணாத அளவாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி உள்ளது. மேலும், ஆண்டு ஒன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 சமையல் எரிவாயு உருளைகள்தான் (கியாஸ் சிலிண்டர்) மானிய விலையில் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
வயிற்றில் அடித்த மத்திய அரசு
இதன்மூலம் மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது. "பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்'' என்ற பழமொழிக்கேற்ப, திரும்ப திரும்ப ஏழை, எளிய பாமர மக்களை மத்திய அரசு வஞ்சித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏறிக்கொண்டே செல்வதும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே வருவதும்தான் டீசல் விலை உயர்விற்கு காரணம் என்கிற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஒரு வலுவற்ற வாதம். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயையும், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்திய ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்திருந்தால், நிச்சயமாக இந்த விலை உயர்வை தவிர்த்திருக்கலாம். ஆனால், இது போன்ற நிரந்தர நடவடிக்கையை எடுக்காமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதையும், இந்திய ரூபாயின் வீழ்ச்சியையும், பணவீக்கத்தையும் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு முறையும் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவது சரியான பொருளாதார நடவடிக்கையாக அமையாது என்பதோடு மட்டுமல்லாமல், விலைவாசி மேலும் உயரவே இது வழி வகுக்கும்.
கட்டண உயர்வு
மத்திய அரசின் இந்த டீசல் விலை உயர்வு அறிவிப்பினை அடுத்து, ஆட்டோ, கார், வேன், லாரி போன்ற தனியார் வாகனக் கட்டணங்கள் கிடுகிடு என உயரக்கூடும். இதன் விளைவாக, தனியார் வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், அலுவலகங்களுக்கு செல்வோர், சுற்றுலாப் பயணிகள், ஏழை எளிய பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கூடுதல் கட்டணத்தை செலுத்தக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
விஷம் போல் உயரப் போகும் விலைவாசி
இது தவிர, இன்றியமையா பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலையும் விஷம் போல் உயரும். மேலும், டீசலை பயன்படுத்தி பம்பு செட்டுகளை இயக்கும் விவசாயிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவர். சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 என்று கட்டுப்படுத்துவது, ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை வெகுவாக பாதிக்கும். இரண்டு மாதத்திற்கு ஒரு சமையல் எரிவாயு உருளை என்பது எந்த குடும்பத்தின் தேவையையும் பூர்த்தி செய்ய இயலாதது ஆகும்.
அனைத்துத் தரப்பு மக்களையும் வாட்டி வதைத்துள்ள மத்திய அரசின் இந்த மக்கள் விரோத செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதோடு, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால், அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கக் கூடிய டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு உருளை மீதான கட்டுப்பாட்டை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அதில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.,












Click it and Unblock the Notifications