எங்களுக்கு மத்திய அரசை மிரட்டத் தெரியாது...கருணாநிதி விசித்திர பேச்சு!

டீசல் விலை உயர்வு குறித்தும், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடும் மக்களை பெரும் கொந்தளிப்புக்கும், குமுறலுக்கும் உள்ளாக்கியுள்ளன. ஆனால் மக்களால் எதுவும் செய்ய முடியாத அவல நிலை. மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களோ ஆளாளுக்கு அறிக்கைகளை மட்டும் விட்டு விட்டு கப்சிப்பென்று இருக்கிறார்கள்.
இந்த நிலையில் திமுக மீது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. காரணம், வழக்கம் போல அறிக்கை விட்டு விட்டு, எங்களுக்கு எதுவும் தெரியாது, மத்திய அரசு எங்களைக் கலந்து ஆலோசிக்கவில்லை என்று மட்டும் கூறி விட்டு திமுக தலைவர் கருணாநிதி அமைதி காப்பதுதான்.
பலமுறை தனது கட்சிக்குப் பிரச்சினை வந்தபோதும், கனிமொழி உள்ளிட்டோருக்கு சிக்கல்கள் வந்தபோதும், அமைச்சர் பதவி கிடைக்காத போதும் மத்திய அரசை கடுமையாக மிரட்டும் தொணியில் பேசியும், செயல்பட்டும் வந்த திமுக, மக்கள் தொடர்பான பிரச்சினைகளின்போது மட்டும் இதுபோன்ற நெருக்கடிகளை மத்திய அரசுக்குக் கொடுக்காமல் கமுக்கமாக இருப்பது மக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில், இன்று கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது ஒரு செய்தியாளர், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மத்திய அரசிலிருந்து திமுக விலகுமா என்று கேட்டார். அதற்குக் கருணாநிதி, அப்படியெல்லாம் மிரட்ட திமுகவுக்குத் தெரியாது என்று பதிலளித்தார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
காரணம், பலமுறை ஆட்சியிலிருந்து விலகுவோம், வெளியிலிருந்து ஆதரவு தருவோம் என்று மிரட்டல் பாலிட்டிக்ஸை திமுக நடத்தியுள்ளது. ஆனால் அப்படியெல்லாம் மிரட்ட எங்களுக்குத் தெரியாது என்று கருணாநிதி தற்போது கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
கருணாநிதி மேலும் கூறுகையில், விலை உயர்வு குறித்து எங்களிடம் காங்கிரஸும், அரசும் கலந்து ஆலோசிக்கவில்லை என்றார். ஆனால் நேற்று இதுதொடர்பாக நடந்த அமைச்சர்கள் குழு ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதியின் மகனும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியும் கலந்து கொண்டார். அவர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவோ அல்லது வெளிநடப்புச் செய்ததாகவோ எங்குமே செய்தி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி மேலும் கூறுகையி்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட்டால், அதில் திமுக தனது எதிர்ப்பையும், ஆட்சேபனையையும் தெரிவிக்கும் என்று தெரிவித்தார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications