ஆந்திர பேரவையில் தெலுங்கானாவுக்காக தீர்மானம் கிடையாது: கிரண்குமார் திட்டவட்டம்
ஹைதராபாத்: ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாது என்று அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தெலுங்கானா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இன்று எழுப்பப்பட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கிப் போயின. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி பேசியதாவது:
தற்போதைய தெலுங்கானா பிரச்சனையை விட 1969-ல் போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. அப்போது நான் பள்ளிக்கூட மாணவனாக இருந்தவன். இப்போதைவிட அப்போது மிக மோசமான நிலைமை இருந்தது. 1969-70-ம் ஆண்டு இந்திரா காந்தி கூட நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார். அதற்கு முன்பு நேரு காலத்திலும் தெலுங்கானா விவகாரத்துக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண முடியவில்லை.
தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு தனி மாநிலம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் மத்திய அரசை யாரும் எப்போதும் நிர்பந்திக்க முடியாது. என்னைப் பொறுத்தவரையில் ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தனித் தெலுங்கானா கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டமாட்டாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications