இனி குறுக்கு சந்துல கூட தீயை அணைக்கலாம்- தீயணைப்பு பைக் கோவையில் அறிமுகம்
கோவை: தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட அதிநவீன தீயணைப்பு வசதிகளுடன் கூடிய மோட்டார் சைக்கிளை கோவை கலெக்டர் கருணாகரன் ஓட்டி பார்த்து, புதிய தீயணைப்பு சேவையை துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் பல பகுதிகளில் நெரிச்சல் மிகுந்த சந்துகள் மற்றும் தெருக்களில் தீ விபத்து ஏற்பட்டால், தீயணைப்பு வண்டிகள் சென்று தீயணைப்பு பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறைக்கு ஜெர்மன் நாட்டு தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அதிநவீன மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் நீர்குமிழி, நுரை தீயணைப்பான் முறையில் இயங்கும் 2 தீயணைப்பு கருவிகளை உள்ளடக்கிய நவீன தீயணைப்பு மோட்டார் சைக்கிள் மூலம் குறுகிய தெருக்களில் விரைந்து சென்று தீயை அணைக்க முடியும். 12 மீட்டர் தொலைவில் இருந்து இயக்கும் வகையில் உள்ள இந்த கருவியை கொண்டு 23 வினாடிகளுக்குள்ளாக சிறிய தீ விபத்துகளை தடுக்கலாம்.
இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கான பயன்பட்டிற்காக 2 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது. கோவை, நீலகிரி கோட்ட தீயணைப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
விழாவில் ரூட்ஸ் நிறுவன இயக்குநர் கவிஞர்.கவிதாசன், கே.ஜி.மருத்துவமனை நிர்வாக அலுவலர் சந்திரசேகர், உதவி கோட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் கலந்து கொண்டு, நவீன தீயணைப்பு மோட்டார் சைக்கிள்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். அதன்பிறகு கலெக்டர் கருணாகரன் நவீன தீயணைப்பு மோட்டர் சைக்கிளை ஓட்டி பார்த்தார்.
அதன்பிறகு அவர் கூறியதாவது,
தமிழக முதல்வர் தீயணைப்புத்துறை கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு நவீன தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் சிறிய தீ விபத்துகள் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
கோவை மற்றும் நீலகிரி மாவட்ட தீயணைப்பு பணியாளர்களின் பணி மேலும் சிறப்பாக நடைபெறும் வகையில் கூடுதலாக 2 தீயணைப்பு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. பீளமேட்டில் தீயணைப்பு நிலையத்திற்கு சொந்தமாக இடம் வேண்டி கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications