மதுரையில் 3 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்-இடிபாடுகளுக்குள் சிக்கிய ஒருவர் பலி
மதுரை: மதுரையில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 3 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மேலும் 6 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
மதுரை மாவட்டம், தத்தனேரி பகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளது. இதற்கு எதிரே உள்ள காமாட்சி நகர் 2வது தெருவில் 4 மாடிகள் கொண்ட கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வந்தது. இது, அப்பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் தவசி(40) என்பவருக்கு சொந்தமானது.
தற்போது 3 மாடிகளின் கட்டுமான பணிகள் முடிவடைந்து 4வது மாடி கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால், மதுரை அலங்காநல்லூரை அடுத்த அம்பலத்தடியை சேர்ந்த சண்முகம், வேல்முருகன், கோவிந்தமணி, அழகர், கிருஷ்ணன், ஆறுமுகம் மற்றொரு ஆறுமுகம் ஆகிய 7 பேர் மட்டுமே பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் எதிர்பாராதவகையில் கட்டிடத்தின் கீழ்தளம் சரிய, மேலே கட்டப்பட்டிருந்த 2 மாடிகளும் இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கினர். சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதியினர் 5 பேரை காயத்துடன் மீட்டனர். ஆனால் 2 பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்க முடியவில்லை.
இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளுக்குள் சிக்கி கிருஷ்ணன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஆறுமுகம்(41) என்பவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து செல்லூர் போலீசார், கட்டிட உரிமையாளர் தவசி மற்றும் காண்டிராக்டர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஆணையாளர் நந்தகோபால் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது மேயர் ராஜன் செல்லப்பா கூறியதாவது:
4 மாடி கட்டிடம் கட்டுவதற்கு வரைபடத்துடன் அனுமதி கேட்டு டிராவல்ஸ் அதிபர் தவசி மாநகராட்சியிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்னும் கட்டிடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அதற்குள் அவர் கட்டிட பணிகளை துவங்கியுள்ளார். மேலும் ஏற்கனவே கட்டிடம் தொடர்பாக மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதையும் கண்டுகொள்ளாமல் அவர் பணிகளை செய்துள்ளார். அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications