விசா விதிமீறல்: குவைத்தில் 1,500 இந்தியர்கள் கைது- 650 பேரை தொடர்பு கொண்ட இந்திய தூதரகம்
குவைத்: விசா காலம் முடிந்தும் குவைத்தில் தங்கியிருந்த 1,500 முதல் 2,000 இந்தியர்களை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
கடந்த புதன்கிழமை குவைத் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் விசா காலம் முடிந்தும் அந்நாட்டில் தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,136 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 1,500 முதல் 2,000 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அதிலும் பெரும்பாலானோர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். கைதானவர்களில் இதுவரை 100 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில் கைதான இந்தியர்களில் 650 பேரை குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் தலையிடுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை இந்த விவகாரத்தில் தலையிட்டு கைதானவர்களுக்கு உரிய சட்ட உதவிகளைச் செய்யுமாறு உத்தரவிட வேண்டும். பழக்கமில்லாத நாடு, நடைமுறைகளில் வேலை பார்க்கும் அவர்கள் மனம் மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அதனால் இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கைதான ராஜஸ்தானியர்களில் பெரும்பாலானோர் பன்ஸ்வாரா, உதய்பூர், துங்கர்பூர் மற்றும் மார்வாரைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக குவைத் உள்துறை அமைச்சகத்தை அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தொடர்பு கொண்டது. இந்த வழக்கை குவைத்தில் உள்ள ராஜஸ்தான் சங்கமும் கவனித்து வருகிறது.












Click it and Unblock the Notifications