திருட்டு வழக்கில் சிறையில் இருக்கும் கணவனை விடுவிக்க ஆண் குழந்தையை விற்ற ஒரிசா பெண்
ஜெய்ப்பூர்: ஒரிசாவில் சிறையில் இருக்கும் கணவரை விடுவிக்க பணம் தேவைப்பட்டதால் 17 மாத ஆண் குழந்தையை பெற்ற தாயே ரூ.5,000க்கு விற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள முந்தமால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கி பத்ரா(20). அவர் கடந்த 13ம் தேதி கட்டாக் சென்று ஜகத்சிங்பூரைச் சேர்ந்த ஒருவரிடம் தனது 17 மாத ஆண் குழந்தையை ரூ.5,000க்கு விற்றார். இது குறித்து ராக்கியின் மாமியார் கனகலதா பத்ரா போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் ராக்கியிடம் விசாரித்தபோது அவர் கூறுகையில், ஆமாம், நான் என் மகனை ஜகத்சிங்பூரைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுவிட்டேன். சிறையில் இருக்கும் என் கணவரை வெளியே கொண்டு வர பணம் தேவைப்பட்டதால் மகனை விற்றேன் என்று ஒப்புக் கொண்டார்.
ராக்கியின் கணவர் மனோஜ் பத்ரா ஒரு திருட்டு வழக்கில் கைதாகி ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள பகதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி முதல் சிறையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மனோஜும், ராக்கியும் கூலித் தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கியின் மாமனார், மாமியார் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்தால் ஜெய்ப்பூரில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளார். போலீசார் குழந்தையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே ராக்கியின் பெற்றோர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு வியாஸ்நகர் தாசில்தார் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அனில் சமால் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications