நாங்கள் ஆஸ்கரை புறக்கணிக்கிறோம், நீங்களும் செய்யுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு ஈரான் கோரிக்கை
டெஹ்ரான்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தைக் கண்டித்து ஆஸ்கரை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஆனால் இது குறித்து ஈரானிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஆஸ்கர் விருது விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தைக் கண்டித்து உலக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தைக் கண்டித்து ஆஸ்கர் விருதுக்கு தங்கள் நாட்டில் இருந்து படங்களை அனுப்பி வைக்கப் போவதில்லை என்று ஈரான் நாட்டு கலாச்சாரத் துறை அமைச்சர் முகமது ஹொசீனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியதைக் கண்டித்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவை ஈரான் புறக்கணிக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன். இதே போன்று மற்ற முஸ்லிம் நாடுகளும் ஆஸ்கர் விழாவை புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஆஸ்கருக்கு அனுப்புவதாக இருந்த ஈரானிய படம் 'எ க்யூப் ஆப் ஷுகரை' நிறுத்தி வைப்பது என்று அதன் தயாரிப்பு நிறுவனத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் படத்தைக் கண்டித்து டெஹ்ரானில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications