மத்திய அரசுக்கு எதிராக மமதா பானர்ஜி தலைமையில் டெல்லியில் போராட்டம்

தலைநகர் டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முதலாவது பிரம்மாண்ட போராட்டம் இதுவாகும். மத்திய அரசின் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்து ஆளும் மத்திய அரசில் இருந்து வெளியேறியது திரிணாமுல் காங்கிரஸ். மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் பந்த் நடத்திய போது அதில் இணைந்து கொள்ளவில்லை. ஆனால் தற்போது டெல்லியில் நாடாளுமன்றம் அருகே மிகப் பிரம்மாண்ட பேரணியை திரிணாமுல் காங்கிரஸ் நடத்தியது.
சிறைக்கு போக தயார்
இந்தப் பேரணியில் மமதா பானர்ஜி பேசுகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடவில்லை. மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டங்களை முன்னெடுக்கும். இதற்காக சிறை செல்லவும் நான் தயாராக இருக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் எங்களோடு இணைந்து பேரணி நடத்துமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங்கையும், அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
மமதா பானர்ஜி தலைமையிலான இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸின் அனைத்து எம்.பிக்களும் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மேற்குவங்கம், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் குவிந்திருந்தனர்.
புது கணக்கு?
மமதாவின் போராட்டத்தில் ஐக்கிய ஜனதா தளத் தலைவரான சரத்யாதவ் கலந்து கொண்டதன் மூலம் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் திரிணாமுல் காங்கிரஸ் இணையக் கூடும் என்று கூறப்படுகிறது. அல்லது காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கட்சிகளை ஒருங்கிணைக்கவும் கூடும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மமதா தனி ஆவர்த்தனத்தை கைவிட்டு அணிசேர்க்கையில் இறங்கிவிட்டார்!












Click it and Unblock the Notifications