காவிரியில் வஞ்சகம்: ஓசூரில் சீமானம் ஒருநாள் உண்ணாவிரதம்
சென்னை: காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஓசூரில் வரும் 5-ந் தேதி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரியில் தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமையை தொடர்ந்து மறுத்துவரும் கர்நாடக அரசு, உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளை கூட நடைமுறைப்படுத்தாமல் வஞ்சித்து வருகிறது. டெல்லியில் காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனநீர் திறந்துவிடவேண்டும் என்று அளித்த உத்தரவை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்த கர்நாடக முதல்-அமைச்சர், இப்போது 3 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடுவதாக அறிவித்துள்ளார். வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரை வரும் 20-ந் தேதி வரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிடவேண்டும் என்பதுதான் பிரதமரின் உத்தரவு.
இப்போது 3 நாட்களுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிடுவதாக கூறுவது ஆணையத்தின் உத்தரவை செயல்படுத்தியதாக காட்டிக் கொள்வதற்குதான். இது திட்டமிட்ட சட்டரீதியான மோசடியாகும். இதில் பிரதமர் உடனடியாக தலையிட்டு அக்டோபர் 20-ந்தேதி வரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவிடவேண்டும். காவிரி நதியில் தமிழனுக்கு உள்ள உரிமையை தமிழ்நாடு ஒருபோதும் விட்டுத்தராது என்பதை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி தமிழ்நாட்டின் எல்லைப்பகுதியான ஓசூரில் நாம் தமிழர் கட்சி எனது தலைமையில் ஒருநாள் தொடர் முழுக்க உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும். தொடர் போராட்டங்களுக்கு அதுவே தொடக்கமாக இருக்கும் என்று சீமான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications