கன்னட அமைப்புகள் மிரட்டல்: கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்- ராமதாஸ்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆணையமும், உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டவாறு காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கூடாது என்று வலியுறுத்தி கர்நாடகத்தில் உள்ள கன்னட அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தப் போராட்டங்களால் இரு மாநில எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவி வருகிறது.
தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கு எதிரான போராட்டத்தின் அடுத்த கட்டமாக வருகிற 6ம் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் என்று கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன. காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தினால் 1991ம் ஆண்டில் நடந்ததைப் போன்று இப்போதும் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கும் என்று சில கன்னட அடிப்படைவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்திருக்கின்றன.
இந்த மிரட்டலால், திருவள்ளுவர்- சர்வக்ஞர் சிலைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளின் மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டிருந்த நல்லுறவு சீர்குலைந்திருக்கிறது.
கன்னட அமைப்புகளின் மிரட்டலால் பெங்களூரிலும், மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களிலும் வாழும் தமிழ் குடும்பங்கள் அச்சத்தில் உறைந்துள்ளன.
முழு அடைப்பு நாள் நெருங்க நெருங்க அவர்களின் அச்சம் அதிகரித்து வருகிறது. இந்த அச்சத்தை போக்கவும், தமிழ் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி கர்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள் காவல்துறை உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமப் பகுதிகளில் தனித்த இடங்களில் வாழும் தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி பதற்றம் தணியும் வரை, நகரப் பகுதிகளில் வாழும் மற்ற தமிழ் குடும்பங்களுடன் சேர்ந்து வாழும் படி தமிழ் சங்கத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். ஆனாலும் தமிழகத்திற்கு எதிரான கன்னட அமைப்புகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருவதால் கர்நாடகத் தமிழர்களின் அச்சம் இன்னும் தணியவில்லை.
எனவே வரும் 6ம் தேதி கர்நாடகத்தில் நடை பெறவிருக்கும் முழு அடைப்பு போராட்டத்தின்போதும், அதற்குப் பிறகும் அங்குள்ள தமிழர்களுக்கும், அவர்களின் சொத்துக்களுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கும்படி கர்நாடக அரசை தமிழக அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.
கர்நாடகத்தில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ் அதிகாரிகளையே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதுடன் தமிழக காவல் துறையில் தலைமை இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி ஒருவரை கர்நாடகத்திற்கு அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.
கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்தி கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications