தமிழகத்தில் மத்தியக் குழு: 4 நாட்களுக்குள் காவிரி நீர் இருப்பு குறித்து அறிக்கை

மத்திய நீர்வளத்துறை செயலாளர் டி.வி. சிங் தலைமயிலான இந்தக் குழு இன்று காலை சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கியை சந்தித்து ஆலோசனை நடத்தியது.
அக்டோபர் 15க்குப் பிறகு காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின் போது, தமிழக பொதுப்பணித் துறை செயலாளரும் உடன் இருந்தார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் டி.வி.சிங் பேசுகையில், நான்கு நாட்களில் எங்களது ஆய்வு குறித்த அறிக்கையை நாங்கள் காவிரிக் கண்காணிப்புக் குழுவிடம் வழங்குவோம் என்றார்.
இன்று தமிழகத்தில் உள்ள அணைகளில் உள்ள நீர் மட்டம், வெளியேறும் அளவு, நீர்வரத்து போன்றவற்றை ஆய்வு செய்யும் மத்தியக் குழு, நாளை கர்நாடகம் சென்று அங்குள்ள அணைகளைப் பார்வையிடவுள்ளது.
டிவி சிங் இன்றும், நாளையும் மட்டும் இருப்பார். பின்னர் அவர் டெல்லி போய் விடுவார். இருப்பினும் அவரது குழுவினர் மேலும் சில நாட்கள் தங்கியிருந்து இரு மாநில நிலவரங்களையும் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிவி சிங் தலைமையிலான குழுவினர் தங்களது ஆய்வறிக்கையை காவிரி கண்காணிப்புக் குழுவிடம் சமர்ப்பிக்கும். இந்தக் குழு அக்டோபர் 8ம் தேதி கூடுவதாக இருந்தது. ஆனால் தற்போது மத்திய நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்வதற்கு வசதியாக கூட்டம் தள்ளிப் போகவுள்ளது.
மேட்டூர் அணைக்கு இன்று டிவி சிங் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று நீர் இருப்பை ஆய்வு செய்யவுள்ளனர். காவிரி பாசனப் பகுதி வயல்களின் நிலையையும் அவர்கள் ஆய்வு செய்வார்கள். நாளை கிருஷ்ணராஜசாகர், கபிணி உள்ளிட்ட அணைகளைப் பார்த்து ஆய்வு செய்யவுள்ளனர்.












Click it and Unblock the Notifications