ஏதோ பிரார்த்தனைக்காக கருப்புச் சட்டை போட்டிருக்கிறார் கருணாநிதி- வளர்மதி

சென்னையில் அதிமுக இலக்கிய அணி சார்பில் தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளுக்காக மத்திய அரசுடனும், அண்டை மாநிலங்களிடையேயும் போராடி வெற்றி காண்பதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் துணை நிற்பது ஆட்சித்திறனே, அறிவுத்திறனே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
பா.வளர்மதி பட்டிமன்ற நடுவராக இருந்தார். ஆட்சித்திறனே என்ற அணியில் நடிகை சி.ஆர்.சரஸ்வதி, கோபி காளிதாஸ், கவுன்சிலர் நூர்ஜஹான் ஆகியோர் பேசினார்கள். அறிவுத்திறனே என்ற அணியில் நடிகர் ஜெயகோவிந்தன், நெத்தியடி நாகையன், காவேரி ஆகியோர் பேசினார்கள்.
அப்போது அமைச்சர் வளர்மதி பேசுகையில்,
முதல்வர் ஜெயலிலதாவின் ஆட்சித் திறனையும், அறிவுத் திறனையும் உலகமே வியந்து பார்க்கிறது. அறிவுத்திறன் அம்மாவின் உடன் பிறந்தது. பலமொழி புலமை பெற்ற அவரது அறிவாற்றல் அவரது மகத்தான செயல் திட்டங்களுக்கு துணை நிற்கிறது.
நல்லதை பாராட்டுவது, தவறை உடனுக்குடன் கண்டிப்பது அவரது தனித்துவம். எல்லோராலும் எதையும் பேசமுடியும். ஆனால் செயல்படுத்துவது கடினம். ஆனால் புரட்சித்தலைவி எந்த நடவடிக்கைகையும் துணிச்சலுடன் எடுப்பார் என்பதை எல்லோரும் அறிவர்.
காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடனான பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டார்.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கு காரணம் காங்கிரஸ் செய்த ஊழலை மறைக்கத்தான் என்று தைரியமாக சொன்னார். இந்தியாவில் எந்த அரசியல் தலைவருக்கும் வராத துணிச்சல் அது.
தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் புரட்சித் தலைவி ஒருவரே. தாலிக்கு தங்கம், முதல் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வரை தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் அவரது சிந்தனையில் உதித்தவை. அவரது அறிவார்ந்த ஆற்றலால் சிறப்பான திட்டங்களை ஆட்சித்திறன் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
திமுக தலைவர் கருணாநிதி ஆடையை மாற்றி மாற்றி பரிகாரம் செய்து பார்க்கிறார். மஞ்சள் துண்டை வீசிவிட்டு கருப்பு சட்டை போட்டுக் கொண்டு துண்டு பிரசுரம் வழங்குகிறார். விலைவாசி உயர்வு, ஊழல் பிரச்சிணையில் சிக்கி தவிக்கும் மத்திய அரசை கண்டித்து துண்டு பிரசுரம் கொடுக்க வேண்டியதுதானே. இது ஏதோ பிரார்த்தணைக்காக போட்டிருக்கும் வேஷம்தான். ஆனால் கருணாநிதியின் எந்த வேஷமும் எடுபடாது. கடவுளின் ஆசியும், மக்களின் ஆதரவும் என்றும் புரட்சித்தலைவிக்கு உண்டு என்றார் அவர்.












Click it and Unblock the Notifications