லண்டனில் பிரார் மீதான தாக்குதல் . மீண்டும் தலை தூக்குகிறதா "பஞ்சாப் பிரிவினைவாதம்"?

Subscribe to Oneindia Tamil

Brar
டெல்லி: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஓய்வு பெற்ற லெப்.கேணல் கே.எஸ். பிரார் மீது திடீரென நடத்தப்பட்ட தாக்குதல் ஒருநாள் செய்தியல்ல..30 ஆண்டுகளுக்கு முபு முடிந்து போனதாக கருதப்பட்ட ஒரு கிளர்ச்சியின் நீட்சி என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

லெப்.கேண்ல கே.எஸ்.பிரார் மீதான தாக்குதலின் பின்னணி என்ன? பஞ்சாப் மாநிலத்தை தனிநாடாக்கக் கோரி போராடிய போராளிகள் பதுங்கியிருந்த பஞ்சாப் பொற்கோயிலுக்குள் 1984-ல் இந்திரா காந்தி அரசு மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையான "ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார்" நடவடிக்கையின் தளபதியாக இருந்தவர் பிரார் என்பதுதான் காரணம்!

பஞ்சாப் பிரிவினைவாதம்- பிந்தரன்வாலே

1980களில் இந்தியாவின் அனைத்து செய்தி ஊடகங்களும் பயன்படுத்திய சொற்றொடர் "பற்றி எரிகிறது பஞ்சாப்" என்பதுதான்! சீக்கிய மதத்தவர்கள் வாழும் பிரதேசத்தை தனிநாடாக்க வேண்டும் என்பதற்காக 'பிந்தரன்வாலே" தலைமையில் சீக்கியர்கள் ஆயுதமேந்திர போராடினர். இப்போதைய பஞ்சாப் ஆளும் கட்சியான சிரோன்மணி அகாலிதளம் 1980களில் இந்த ஆயுதப் போராட்டத்தை முழுவீச்சில் ஆதரித்தது. சீக்கியர்களின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததால்தான் பிரதமர் இந்திரா காந்தியை சீக்கியர்கள் சுட்டுப் படுகொலையும் செய்தனர்! ஆனால் ராணுவ பலத்தால் ஒடுக்கப்பட்டுவிட்டதாக கருதப்பட்ட சீக்கியர்களின் தனிநாட்டு தாகம் என்பது வெளிநாடுகளில் வேர்விட்டு விருட்சமாகி விரிந்து கிடக்கிறது. இன்றைக்கும் கனடாவிலும் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏராளமான பஞ்சாப் தனிநாடு கோரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இன்றளவும் பஞ்சாப் மாநில அரசியலில் பிந்தரன்வாலே உள்ளிட்ட போராளிகளுக்கு மரியாதை செலுத்தினால்தான் வாக்குகள் கிடைக்கும் வகையில் தலைமுறைகளைக் கடந்தும் பிரிவினைவாதம் வேர்பிடித்து நிற்கிறது.

இந்தப் பிரிவினைவாதப் போராட்டம் முழு வீச்சோடு அது ஆயுத வழியிலோ அல்லது ஜனநாயக வழியிலோ மீண்டும் உயிர்பெறக் கூடும் என்பதைத்தான் அண்மைய சில நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

1. பிந்தரன்வாலே நினைவு மண்ட்பம்

சில மாதங்களுக்கு முன்பு பிந்தரன்வாலே உள்ளிட்ட போராளிகள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அதாவது சீக்கியர்களின் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் பிந்தரன்வாலே பெயரிலான நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த மண்டபம் 18 மாதங்களில் முடிக்கப்பட இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் பிந்தரன்வாலேயின் மகன்கள் கலந்து கொண்டனர். இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சத்வந்த்சிங்கின் தாயார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஏறத்தாழ மூன்றாயிரம் சீக்கிய ஆண்களும் பெண்களுமாக கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்ற நாள் ஜூன் 6! அதாவது பிந்தரன்வாலேயும் அவரது ஆதரவாளர்களும் சுட்டுக்கொல்லப்பட்ட நினைவுதினத்தில்தான் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை யாரோ ஒரு சில தனிப்பட்ட அமைப்புகள் செய்துவிடவில்ல. இன்றைய பஞ்சாப் ஆளும் கட்சியான சிரோமணி அகாலிதளத்தினர் பெரும்பான்மையாக அங்கம் வகிக்கும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டிதான் இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருக்கிறது. இந்த கமிட்டிதான் சீக்கியர்கள் மதிக்கும் அவர்கள் மதத்தின் முதன்மையான அமைப்பு. இவர்களைப் பொறுத்தவரை "பிந்தரன்வாலே" ஒரு மாவீரன் - தியாகி! சீக்கியர்களின் மதத்தையும் சீக்கியர்களின் புனித ஆலயமாக பொற்கோவிலையும் மீட்கப் போராடிய போராளி பிந்தரன்வாலே என்பதுதான் இவர்களது கருத்து. பிந்தரன்வாலேவுக்கான நினைவிடம் என்பது "ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு புரட்சியின் நினைவகம்" என்கிறது அகாலி தளம். இந்திய மத்திய அரசும் ஊடகங்களும் பிந்தரன்வாலேயை ஒரு பயங்கரவாதியாக- தீவிரவாதியாக சித்தரித்தாலும் அவரது சொந்த மண் அவரை போராளியாகவே பார்க்கிறது. 65 ஆண்டுகால சுதந்திர இந்தியா வரலாற்றில் இன்னமும் மாநில உணர்வுகள் தலைதூக்கியே இருக்கின்றன என்பதைத்தான் இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஆனால் சிரோமணி அகாலி தளத்தின் கூட்டணிக் கட்சியான பாரதிய ஜனதாவோ இதை வேறுவிதமாகப் பார்க்கிறது. இந்த நடவடிக்கை சரியானது அல்லது சாடியிருக்கிறது.

2. ரஜோனா தூக்கு விவகாரம்

பிந்தரன்வாலே நினைவு மண்டபம் போலத்தான் பல்வந்த் ரஜோனாவின் தூக்கு தண்டனை விவகாரமும்! பஞ்சாப் முதல்வராக இருந்த பியாந்த்சிங்கை 1995-ம் ஆண்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர் பஞ்சாப் தனிநாடு கோரும் காலிஸ்தான் இயக்கத்தினர்! இந்த கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர் பல்வந்த் ரஜோனா. தமது இலட்சியத்தில் உறுதியாக இருப்பதற்காக கருணை மனுவே போடாமல் தூக்குமேடை ஏறத் தயார் என அறிவித்தவர் ரஜோனா. அவர் தூக்கிலிடப்படும் தேதி நெருங்கிய நிலையில் பஞ்சாப் மாநிலமே பதறியது! பஞ்சாப் முதல்வர் பிரகாசிங் பாதல் டெல்லிக்கே வந்து கருணை மனு கொடுத்தார்.! பஞ்சாப் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவரது தூக்கு தண்டனையை நிறுத்தப்பட்டது! இந்த விவகாரத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்து கருணைக் குரல் கொடுத்த சம்பவமும் அரங்கேறியது!

மீண்டும் பிரிவினைவாதம்

தற்போதைய 'உலகமயமாதல்" எனும் சூழ்நிலையில் தீவிரவாதம் அல்லது பிரிவினைவாத இயக்கங்களைக் கட்டமைத்தலும் நிதிசேகரித்தலும் எளிதான ஒன்றாகிவிட்டது. பிந்தரன்வாலேவின் நினைவிடத்தை கட்டுவதற்கு வெளிநாடு வாழ் சீக்கியர்கள் ஏராளமானோர் உதவுகின்றனர் என்பதே நிதர்சனம். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளோ அம்மாநிலம் எதிர்கொள்ளப் போகிற பேரபாயம் ஒன்றை சுட்டிக் காட்டுகின்றனர். 1970களிலும் 1980களிலும் இருந்ததைக் காட்டிலும் பிரிவினைவாத எண்ணம் கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதுதான்! அதாவது தலைமுறைகளைக் கடந்தும் இந்த சிந்தனையோட்டம் நீட்சியடைந்தே இருக்கிறது என்கின்றனர்!

இந்திய கூட்டாட்சி முறையில் மாற்றம் தேவை?

பஞ்சாப் மாநிலத்தில்தான் இதுபோன்ற சிந்தனை ஓட்டம் இருக்கிறது என்பது இல்லை...இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தின் குரலை மத்திய அரசு நிராகரிக்கும்போதெல்லாம் இந்தக் குரல் எழும்புகிறது. காவிரியில் தமிழகத்துக்கான நீதி மறுக்கப்படும் போது இந்தக் குரல் உருவெடுக்கிறது. அண்மையில் பல நூறு பேரை பலி கொண்ட அசாம் இன மோதலையும் இந்தக் குரலில்தான் அணுக வேண்டியிருக்கிறது. "மகராஷ்டிரம் மராட்டியர்களுக்கே" என்ற கோஷமும் தனித்தெலுங்கானா மாநிலக் கோரிக்கையும் ஜம்மு காஷ்மீரத்து நிலைமையையும் பார்க்கும்போது இந்திய கூட்டாட்சி அமைப்பில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டாக வேண்டிய தேவை இருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

இத்தகைய தூரநோக்கு சிந்தனையில்லாமல், பஞ்சாபில் பிரிவினைவாதம் தலையெடுக்கப் போகிறது என்று உள்துறை அமைச்சகம் அந்த மாநிலத்தை எச்சரிக்கை விடுத்து பயனேதுமில்லை. தேசிய இனம்சார்ந்த சிந்தனைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வை முன்வைக்க வேண்டிய நிலை இந்திய மத்திய அரசுக்கு இருக்கிறது. இதை உதாசீனப்படுத்திக் கொண்டே செல்லலாம் என்று மத்திய அரசு எண்ணுகிற போது மீண்டும் 1980களை பஞ்சாப் மட்டுமின்றி வேறுசில மாநிலங்களும் அரங்கேற்றுவதுதான் நடக்கும்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+