வடகிழக்குப் பருவ மழை துவங்கும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்: ராமதாஸ்

இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பின்படி, காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருவதால், காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகள் அனுபவித்து வரும் எண்ணிலடங்காத பிரச்சனைகளை உங்களின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி காவிரி ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் நீங்கள் பிறப்பித்த உத்தரவிற்கு பணிய கர்நாடக அரசு மறுத்தது. அதன்பிறகு இப்பிரச்சனையில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதி வழங்கும் வரை, தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீரைக் கூட கர்நாடகா திறந்து விடவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுரைக்கு பிறகு தான் காவிரி பாசன மாவட்டங்களின் சம்பா பாசனத்திற்காக, கடந்த மாதம் 29ம் தேதி இரவு முதல், காவிரியில் வினாடிக்கு 9000 கன அடி வீதம் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது.
இந்த தண்ணீர் தமிழக காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் தேவைக்கு போதுமனதல்ல என்ற நிலையில், தற்போதைய அளவு கூட தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட கூடாது என்று வலியுறுத்தி கர்நாடக அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நீங்கள் இன்று டெல்லியில் கூட்டியுள்ளீர்கள். இக்கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள், தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்த வேண்டும் என்பதற்காக, பொய்யான தகவல்களை தெரிவித்து உங்களை தவறாக வழி நடத்தக்கூடும்.
இது போன்ற நியாயமற்ற கோரிக்கைகளுக்கு நீங்கள் உடன்பட கூடாது. மாறாக காவிரி பாசன மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயனடையும் வகையில், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாளான வரும் 15ம் தேதிக்குப் பிறகும், வடகிழக்கு பருவ மழை துவங்கும் வரை தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications