கர்நாடகத்தைப் போல இங்கும் அனைத்துக் கட்சிக் கூட்டாதது ஏன்?.. கருணாநிதி கேள்வி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். அதுபோல இங்கு கூட்டப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வர் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதித்தார். ஆனால், தமிழகத்தில் அவ்வாறு கூட்டப்படவில்லை என்றார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் காவிரிப் பிரச்சினையில் தங்களது மாநிலத்திற்கு ஆதரவாகப் பேசுகிறார்களே என்ற கேள்விக்கு, அவர்களுக்கு வேறு வழியில்லை என்றார்.

கருப்புச் சட்டைப் போராட்டம் வெற்றி

முன்னதாக கருணாநிதி ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார். அது:

27-9-2012 அன்று தலைமைக் கழகத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையிலேதான் இந்த ஆட்சியின் நடவடிக்கை குறித்து பேசி முடிவெடுப்பதற்காக 1-10-2012 அன்று கழகத்தின் தலைமைச் செயற்குழு கூடி விவாதிப்பதென்று முடிவு செய்து அறிவித்திருந்தது.

இடையிலே மூன்றே நாட்கள். ஆனாலும் 1-10-2012 அன்று செயற்குழுவில் 257 உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்கள் 31 பேரும் கலந்து கொண்டு காலை 10 மணி முதல் 1.30 மணி வரை சிறப்பாக நடைபெற்று; செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்தில் உரையாற்றி, விவாதித்து இறுதியாக இரங்கல் தீர்மானம் இல்லாமல், ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அன்றைய தினம் நிறைவேற்றப்பட்ட போராட்டத் தீர்மானத்தில் 5-10-2012 அன்று ஒரு நாள் அதுவும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையில் சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலிருந்து கடற்கரைச் சாலைவழியாக, கடற்கரை சாலையிலே உள்ள கலங்கரை விளக்கம் வரையிலும், மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக அரசின் போக்கினைக் கண்டித்து, கறுப்பு உடை அணிந்த மனிதச் சங்கிலி அமைத்து, அமைதியாக அற வழியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்றுதான் குறிப்பிட்டிருந்தோம்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 1-10-2012. கறுப்பு உடை அணிந்த மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானிக்கப்பட்டது 5-10-2012. சென்னையில் 1ஆம் தேதி மாலையிலேயே மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன் காவல் துறையிடம் முறைப்படி அனுமதிகோரி கடிதமும் கொடுத்துவிட்டார். அந்தக் கடிதத்தில் மூன்று மாற்று வழிகளைத் தெரிவித்து, தீர்மானத்தில் குறிப்பிட்ட அந்த வழியில் அனுமதி கொடுக்க அரசு தயங்கினால், மூன்றில் ஒரு பாதையில் அனுமதி தரவேண்டுமென்று கோரப்பட்டது.

ஆனால் இந்த அரசிடமிருந்து எந்த அனுமதியோ, பதிலோ வரவில்லை. அதேநேரத்தில் வேறு சில மாவட்டங்களில் மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு காவல் துறையினர் பதில் கொடுத்திருந்தனர். அந்த நிலையிலேதான், 'சீப்பை ஒளித்து வைத்துவிட்ட காரணத்தால் திருமணத்தை நிறுத்தி விடக் கூடாது' என்ற வகையில்- கறுப்பு உடை அணிந்து மனிதச் சங்கிலி அணி வகுப்புக்குப் பதிலாக- ஆட்சியினர் பற்றிய விமர்சனங்களை துண்டுப் பிரசுரங்களாக கையால் எழுதியோ, அச்சேற்றியோ கழகத்தினர் ஒவ்வொரு ஊரிலும் உள்ள பொதுமக்களைத் தேடிச்சென்று வழங்கவேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டு, அவ்வாறே அறிவிக்கப்பட்டது.

5-ம் தேதி ஒரு நாள் ஒரு சில மணி நேரம் மனிதச் சங்கிலியோடு முடிந்திருக்க வேண்டிய போராட்டம், மூன்று நாட்களாக நீடிக்கப்பட்டு, சென்னை மாநகரிலும், மாவட்டத் தலைநகரங்களிலும் மட்டுமே நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்குப் பதிலாக ஒவ்வொரு கிராமத்திலும் இந்த ஆட்சியினரைப் பற்றிய எல்லாம் அச்சியேற்றப்பட்ட துண்டறிக்கைகளாக லட்சக்கணக்கான மக்களைத் தேடிச் சென்று, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த அளவிற்கு இந்தப் போராட்டத்தை பெரிதாகவும், விரிவாகவும் ஆக்கிய பெருமை நமது முதல்வர் ஜெயலலிதா ஒருவருக்கே உரியதாகும். அதற்காகத்தான் ஆயிரம் விளக்குத் தொகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தபோது முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்.

துண்டுப் பிரசுரங்களை அச்சேற்றி விநியோகிக்க வேண்டுமென்ற முடிவினை 3ஆம் தேதி எடுத்து, அது நாளேடுகளில் 4-ம் தேதியன்றுதான் வெளிவந்தது. அதற்குப் பிறகு 5ஆம் தேதிக்கு 24 மணி நேரங்கள்தான். அதற்குள் கழக உடன்பிறப்புகள் என்ன மாயம் செய்தார்களோ? எப்படித்தான் அச்சேற்றினார்களோ? என்று வியக்குமளவுக்கு லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் பொது மக்கள் கையில்! 5-ம் தேதியும், 6-ம் தேதியும் தொடர்ந்து தொலைபேசிகள்!

கறுப்பு உடையில் கழகத்தினர் தெருத்தெருவாகச் சென்று வீடுகளிலே மட்டுமல்ல; சாலையோரங்களிலே நின்றவாறு ஓடுகின்ற கார்களை நிறுத்தியும், பேருந்துகளில் பயணம் செய்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து தமிழ்நாட்டில் இந்த ஆட்சியினருக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியை மூன்றே நாட்களில் ஏற்படுத்தி விட்டார்கள்.

குறைந்த நாட்களில் இப்படிப்பட்ட எழுச்சியை ஏற்படுத்திய என்னுடைய உடன் பிறப்புகளுக்கெல்லாம் என் நெஞ்சார்ந்த நன்றி யினையும், பாராட்டினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழகத்தின் சார்பில் எதைச் செய்தாலும், அதை எதிர்க்கின்ற போக்குத்தான் இன்றைய ஆட்சியினரிடம் உள்ளது. கடந்த மாதம் 'டெசோ' இயக்கம் சார்பில் சென்னையிலே ஒரு மாநாட்டினை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தபோதும், அ.தி.மு.க. ஆட்சியினர் அதற்கு அனுமதி மறுத்தார்கள்.
அப்படி அனுமதி மறுக்கப்பட்ட காரணத்தினாலே, அந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

தற்போது இந்த கறுப்பு உடை அணிந்து மனிதச் சங்கிலி நடத்துகிறோம் என்றால் அதற்கும் அனுமதி மறுப்பு. கடந்த கால ஆட்சியிலே நிறைவேற்றப் பட்ட திட்டங்களை யெல்லாம் குப்பைக் கூடைக்கு அனுப்பலாம், அதைப்போலவே தி.மு.கழக ஆட்சியில் எழுப்பப்பட்ட கட்டிடங்களைக்கூட அப்படியே கிடப்பிலே போடலாம், யார் நம்மை என்ன செய்ய முடியும் என்றெல்லாம் முதலமைச்சர் செயல்படுவது அவருக்கு நல்லதோ கெட்டதோ, இந்த நாட்டு மக்களுக்கு நல்லதல்ல.

திமு கழகம் விநியோகித்த துண்டுப் பிரசுரங்கள் தமிழ்நாட்டு மக்களின் கவனத்திற்கு மாத்திரமல்ல; முக்கியமாக இந்த ஆட்சியிலே இருப்போரின் நடவடிக்கைக்கு உரிய செய்திகள்தான் அதிலே இடம் பெற்றுள்ளன.

அவற்றின் மீது இந்த ஆட்சியினர் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும். மாறாக யார் மீது என்ன வழக்கு போடலாம்? யாரை எப்படி கைது செய்யலாம்? என்றெல்லாம் சிந்தித்து காலத்தை செலவழிக்க வேண்டாம். முதலமைச்சர் இனியாவது அதைத் தவிர்ப்பாரா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+