ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 'பைன்' ஜாஸ்தி-ரயில்வே எச்சரிக்கை

கர்நாடக மாநிலம் குல்பர்க்கா அருகே பயணிகள் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் எரியும் தன்மை கொண்ட பொருட்களை பயணிகள் எடுத்து சென்றதே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரயில்களில் எரியும் மற்றும் வெடிக்கும் தன்மை கொண்ட பொருட்களை எடுத்து செல்ல இருக்கும் தடையை தீவிரப்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
ரயில்களில் பெட்ரோல், கேஸ் சிலிண்டர், பட்டாசுகள், அமிலம், மண்ணெண்ணை ஸ்டவ், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதை மீறினால் ரூ.500 வரை அபராதம் அல்லது ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
ஆனால் ரயில்களில் வெடிக்கும் பொருட்களை, பயணிகள் எடுத்து செல்வதை குறைக்க முடியவில்லை. இதையடுத்து தற்போது விதிக்கப்படும் அபாரதத்தை ரூ.1,000 என்று உயர்த்தியும், சிறை தண்டனையை 3 ஆண்டுகளாக அதிகரிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை எடுத்து சென்றால், ரயில்வே சட்டம் பிரிவு 164ன் கீழ் ரூ.1,000 வரை அபராதம் அல்லது 3 வருட சிறை தண்டனையும் விதிக்கப்படும். இல்லாவிட்டால் இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். ரயில் பயணிகளின் பாதுகாப்பு உதவிக்கு, 011-23303982, 011-23303983, 011-23303748 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
