கர்நாடகத்துக்கு தமிழகம் தக்க பதிலடி.. முதலில் நிலுவையில் உள்ள 48 டிஎம்சி நீரை தர கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Cauvery
டெல்லி: சம்பா சாகுபடிக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய 48 டிஎம்சி காவிரி நீரை உடனடியாக வழங்குமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் தமிழகத்துக்கு அக்டோபர் மாத இறுதிவரை காவிரியில் கர்நாடகம் 8.85 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்பு குழு கூறியுள்ள அளவு குறைவானது என்றும், அந்த அளவு நீர் தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசு கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்துக்கு நாள்தோறும் 9,000 கன அடி நீர் வழங்க வேண்டும் என காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய தமிழகம் வலியுறுத்தவில்லை; அதனால் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் உள்ள அளவே போதுமானது என்று தமிழகம் கருதுகிறது. எனவே, கூடுதல் நீரைக் கோரும் தமிழகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.

இதையடுத்தே அதற்கு பதிலடியாக இந்த புதிய மனுவை தமிழகம் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், காவிரி நடுவர்மன்ற உத்தரவை மீறி இரண்டு மடங்கு நிலப்பரப்பில் கர்நாடகம் சாகுபடி செய்து வருகிறது. இதற்கு 86.4 டிஎம்சி நீர் தேவைப்படும் என்று காவிரி கண்காணிப்புக் குழு குறைவாக மதிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூன் முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கர்நாடகத்தின் 4 அணைகளுக்கும் 121 டிஎம்சி நீர் வந்துள்ளது. இதில் 22 டிஎம்சி நீர் வழக்கத்தை விட அதிகமாகும்.

ஆனால், தமிழகத்துக்கு பிலிகுண்டுலுவில் 54 டிஎம்சி நீரும், மேட்டூர் அணைக்கு 40 டிஎம்சி நீரும் மட்டும் வந்து சேர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்துக்கு தரச் சொன்ன அளவான 1,89,000 கன அடியை விட அதிகமாக 2,07,000 கன அடி நீர் தரப்பட்டதாக கர்நாடகம் சொல்வதும் பொய். செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 15 வரை கணக்கிட்டாலே தமிழகத்துக்கு 1.21 டிஎம்சி அடி நீர் குறைவாக வந்து சேர்ந்துள்ளது.

ஆனால், இந்த விவரங்களை காவிரி கண்காணிப்புக் குழு கவனத்தில் கொள்ளவில்லை.

அதே போல குடிநீர்த் தேவைக்காக கர்நாடகத்துக்கு 23 டிஎம்சி அடி நீர் தேவை என்று அந்த மாநிலம் கூறுவதும், அதை கண்காணிப்புக் குழு ஏற்பதும் தவறு. காவிரி நதி நீர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி கர்நாடகத்துக்கான குடி நீர்த் தேவைக்கான நீரின் அளவு 5.5 டிஎம்சி அடி மட்டுமே.

தமிழகத்துக்கு அக்டோபர் 16 முதல் 31ம் தேதி வரை 8.85 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ள அளவு குறைவானது. இது தமிழகத்தின் தேவையைப் பூர்த்தி செய்யாது.

இதனால், வறட்சிக் காலங்களில் கர்நாடகம் வழங்க வேண்டிய நிலுவை நீரான 48 டிஎம்சியை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இதை தினமும் 2 டிஎம்சி என்ற கணக்கில் 24 நாள்களுக்கு கர்நாடகம் வழங்க வேண்டும். அப்போதுதான், தமிழகத்தில் 14.53 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெல்லை காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் ஒரு பயிரைக் காப்பாற்ற முடியாது. ஏராளமான தமிழக விவசாயிகள் மிக இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

ராபி பருவப் பயிருக்காக நீர் வேண்டும் என்று கர்நாடகம் கூறுகிறது. ராபி பருவ பயிர் என்பதே நவம்பரில் தான் பயிரிடப்படும். இப்போது எந்த ராபி பருவ பயிரும் நீருக்காக காத்துக் கொண்டிருக்கவில்லை.

மேலும் கர்நாடகத்தில் இப்போது பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் அளவு 40,000 ஏக்க்கர் தான். ஆனால், 60,000 ஏக்கரில் பயிர்கள் நிற்பதாக காவிரி கண்காணிப்புக் குழு கணக்கிட்டுள்ளது.

கர்நாடகத்தைவிட தமிழகத்தில் தான் அதிகமாக சம்பா பயிர் பயிரிடப்படுகிறது. அதுவும் இப்போது நீருக்காக காத்துக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளது தமிழகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+