கருணாநிதியின் பேச்சுக்கு மரியாதை கொடுக்கலாமா? கேட்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
சேலம்: கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் பேச்சிற்கு மதிப்பு அளிக்க முடியாது. அவர் இன்று கூறிய கருத்திற்கு நாளை மறுப்பு தெரிவிப்பார் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சேலத்தில் கூறியதாவது,
கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி நடந்து வந்தாலும், காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையை நாங்கள் விட்டுதர தயாராக இல்லை. தமிழகத்திற்கு காவிரி நீர் அளிக்க, கர்நாடக முதல்வரும், பாஜக தலைவர்களும் தயாராக உள்ளனர்.
ஆனால் கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சியான காங்கிரஸூம், கன்னட மொழி குழுவினரும், கர்நாடக அரசை மிரட்டி காவிரி நீர் திறந்து விடுவதை தடுத்து வருகின்றனர். கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு, பாஜக அரசுசெயல்பட வேண்டியுள்ளது.
காவிரி விவகாரத்தில் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் செயல்பாடு மோசமானது. கர்நாடகாவையும், தமிழகத்தையும் பிரிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருகிறார். அவர் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதி அற்றவர். அவர் உடனே அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.
கர்நாடக அரசை 356 பிரிவை பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது பேச்சுக்கு மதிப்பு அளிக்க நாங்கள் தயாராக இல்லை. அவர் இன்று கலைக்க வேண்டும் என்று கூறுவார். ஆனால் நாளை அதே கருத்தை தவறு என்று கூறுவார். எனவே அவரது பேச்சுக்கு மதிப்பு அளிக்க முடியாது.
சேது சமுத்திர திட்டம் குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.












Click it and Unblock the Notifications