நகைக்கடை அதிபரின் மனைவியை அரிவாளால் வெட்டி 1 கிலோ நகைகள் கொள்ளை
அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஒரு கிலோ நகைகளுடன் சாலையில் போய்க் கொண்டிருந்த நகைக் கடை அதிபரின் மனைவியை அரிவாளால் வெட்டி நகைகளை சிலர் திருடிக் கொண்டு போய் விட்டனர்.
அறந்தாங்கி அருகே உள்ள கே.புதுப்பட்டி கடைவீதி பகுதியை சேர்ந்தவர் சாத்தையா சுப்பிரமணியன். இவர் அதே பகுதியில் வள்ளி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். மனைவி பெயரில் இந்தக் கடையை நடத்தி வருகிறார். இருவரும் தினசரி ஒன்றாகப் போய் கடையைத் திறப்பார்கள்.
இன்று நல்ல மழை பெய்து கொண்டிருந்ததால், மனைவியை முன்னால் அனுப்பியுள்ளார் சாத்தையா. வள்ளியும் கடைச் சாவி மற்றும் ஒரு கிலோ தங்க நகைகளுடன் கூடிய பெட்டி ஆகியவற்றுடன் கடைக்குப் போனார்.
இந்த நிலையில் திடீரென ஒரு மாருதி வேன் வள்ளி முன்பு வந்து நின்றது. பின்னர் அதிலிருந்து இறங்கிய 3 பேர் கொண்ட கும்பல் வள்ளியின் கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் நகைப் பெட்டியைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.
இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications