13 தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை!!
சென்னை: தேமுதிகவைச் சேர்ந்த மொத்தம் 13 எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. அதை உரிமை மீறல் விவகார ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு சபாநாயகர் தனபால் அனுப்பி வைத்தார்.

நேற்று சட்டசபையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் சபாநாயகர் தனபால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில்,
கடந்த திங்கள்கிழமை சட்டசபைக் கூட்டம் முடிந்த பிறகு, தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் எஸ்.செந்தில்குமார், அருட்செல்வன், டி.முருகேசன், ஆர். சாந்தி ராஜமாணிக்கம் மற்றும் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தொகுதி பிரச்னை தொடர்பாக முதல்வரைச் சந்திக்க அனுமதி பெற்றுத் தர வேண்டி ஒரு கடிதத்தை அளித்தனர்.
எந்தவொரு உறுப்பினரும் முதல்வரை நேரில் சந்திக்க நேரம் ஒதுக்குவதற்கு கோரிக்கை வைத்து, முதல்வரின் செயலாளரிடம் நேரடியாகவே கடிதம் அளிப்பதுதான் சரியான நடைமுறை என்றும் தெரிவித்தேன். அப்போது, அவர்கள் தாங்கள் முதல்வரிடம் தொகுதி பிரச்னை தொடர்பாக பேச வேண்டியிருப்பதால் அதற்கு சபாநாயகர் ஆவன செய்ய வேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தி கடிதத்தைத் தந்து விட்டு வெளியில் சென்று பத்திரிகைகளுக்கும், ஊடகங்களுக்கும், மலிவான விளம்பரம் தேடும் வகையில், அரசியல் நோக்கத்துக்காக பேட்டி அளித்துள்ளதாகவே கருதத் தோன்றுகிறது.
சட்டசபை உறுப்பினர்கள் ஒரு மாநில முதல்வரைச் சந்திக்க உள்ள அடிப்படை நடைமுறையைக்கூட கடைப்பிடிக்காமல் அதுபற்றி நான் பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்கவில்லை. என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்து விட்டு, உள்நோக்கத்துடன் பேட்டி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே, இந்தப் பிரச்னையில் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது, அவை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிகிறது. சட்டசபை விதிப்படி, அது குறித்து ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக அவை உரிமைக் குழுவுக்கு இந்தப் பிரச்னையை அனுப்பி வைக்கிறேன்.
சுந்தரராஜனை வழிமறித்து அசிங்கமாகப் பேசி..
கடந்த திங்கள்கிழமை சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன் வெளியே வந்தார். அப்போது சபை லாபியில் வைத்து அவரை தேமுதிக உறுப்பினர்கள் ப.பார்த்தசாரதி மற்றும் தினகரன் ஆகியோர் தரக்குறைவாகப் பேசி அவரது சட்டையைப் பிடித்து தாக்க முற்பட்டதாகவும், எனவே, அவருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவரது உரிமையைப் பாதிக்கும் வகையில் மேற்கூறிய உறுப்பினர்கள் செயல்பட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தனது கடிதத்தில் ஆர்.சுந்தர்ராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தப் பிரச்னையில் மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது, அவை உரிமை மீறல் இருப்பதாகத் தெரிவதால், பேரவை விதியின் கீழ் அது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க இந்தப் பிரச்னையை அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்கிறேன் என்றார் சபாநாயகர்.
இன்று மேலும் 6 பேர் மீது
இந்த நிலையில் இன்று மேலும் 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் மீது உரிமை மீறல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக சபாநாயகர் தனபால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இன்றைய தினம் கொறடா வைகைசெல்வன் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்திருந்தார். அதில் தேமுதிக எம்.எல்.ஏ.க்களான திருக்கோவிலூர் வெங்கடேசன், திருச்செங்கோடு சம்பத்குமார், செங்கம் சுரேஷ்குமார், சூலூர் தினகரன், எழும்பூர் நல்லதம்பி ஆகியோர் ஒரு கடிதத்தை முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அலுவலகத்தில் 30-ந்தேதி கொடுத்து சென்றதாகவும், அதை அங்கு ஏற்க மறுத்ததாகவும், தேமுதிக எம்.எல்.ஏ. சந்திரகுமார் பேட்டியாக தெரிவித்திருந்தார்.
இதை அவை உரிமை மீறலாக கருதுவதால் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வைகைசெல்வன் கேட்டிருந்தார். இது அவை உரிமை மீறலாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவர்களது செயல் முதல்வரின் உரிமையை பாதிக்கும் வகையிலும் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. இந்து பத்திரிகைக்கு இதுகுறித்து பேட்டி அளித்த எம்.எல்.ஏ. சந்திரகுமாரின் செயல் அவை உரிமையை மீறுவதாக இருப்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் சுந்தர்ராஜன், அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன் ஆகியோர் முதல்வரை முறையான அனுமதி பெற்று சந்தித்திருக்கிறார்கள். ஆனால் இதை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் விமர்சிக்கும்போது இது ஒரு நாடகம் என்று கூறி இருக்கிறார். அவரது மனைவி பிரேமலதாவும் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.
அதுமட்டும் அல்ல மைக்கேல் ராயப்பன், சுந்தர்ராஜன் ஆகியோருக்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளது. முதல்வரை சந்திக்க வேண்டும் என்று வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேரும் போகும்போது பத்திரிகையாளர்களையும் ஊடகங்களையும் கூடவே அழைத்து சென்றதன் மூலம் மலிவான அரசியல் தேட முயன்றுள்ளனர்.
எனவே இந்த 5 எம்.எல்.ஏ.க்கள்தான் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே வெங்கடேசன், சம்பத்குமார், சுரேஷ் குமார், தினகரன், நல்ல தம்பி, பேட்டியளித்த சந்திரகுமார் ஆகிய 6 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகை செல்வன் கேட்டுள்ளார்.
மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது அவை உரிமையை மீறிய செயலாக கருதுவதால் இதை உரிமை குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதேபோல் செ.கு.தமிழரசனும் ஒரு உரிமை மீறல் பிரச்சினை கடிதத்தை கொடுத்துள்ளார்.
தேமுதிக கொறடா சந்திரகுமார், திருவெறும்பூர் செந்தில் குமார், மயிலாடுதுறை அருட்செல்வம், செங்கல்பட்டு முருகேசன், சேந்தமங்கலம் சாந்தி ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். எனவே இதையும் உரிமைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications