மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: நாராயணசாமி
டெல்லி: தமிழகத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தப்படுவதால் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகத்துக்கான மத்திய இணையமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சில நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டியளித்த நாராயணசாமி, கூடங்குளம் அணு உலைக்கு முன்பு ஆதரவளித்து வந்த திமுக தற்போது பின்வாங்கி விட்டதாகவும், தற்போதும் அதிமுகவே ஆதரவளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நாராயணசாமியை ஒரு பிடி பிடித்திருந்தார்.
இந் நிலையில் டெல்லியில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி, தமிழகத்துக்கு சுமார் 3,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் தொழிற்சாலைகளும், விவசாயிகளும், மீனவர்களும் மற்றும் பொதுமக்களும் வழக்கத்தை விட அதிகமான மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களின் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.
கூடங்குளம் அணு உலையில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் உற்பத்தி தொடங்குகிறது. அங்கு உற்பத்தி ஆகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டுக்கு வழங்குமாறு முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அங்கிருந்து 1,000 மெகாவாட் தமிழகத்துக்கு வழங்கப்படும். சென்னை அருகே உள்ள வல்லூர் அனல் மின் நிலையத்தில் இருந்து 300 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். இது தமிழகத்தின் மின்சாரத் தேவையை ஓரளவு ஈடு செய்யும். மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதிய மின் திட்டங்களை மாநில அரசுகள் தொடங்க வேண்டும்.
தென் மாநில மின் பாதை மூலம் தமிழகத்துக்கு மின்சாரத்தை வழங்க மத்திய மின்சாரத் துறை அமைச்சரிடம் பேசியுள்ளோம். தென் மண்டல மின் பாதை வலுவாக இல்லாததால்தான் டெல்லி அரசு ஒப்படைத்த மின்சாரத்தை தமிழகத்துக்கு விநியோகிக்க முடியவில்லை.
மின்சாரப் பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் எழுதிய கடிதங்களுக்கு உரிய நேரத்தில் பிரதமர் பதிலளிப்பார்.
திமுகவுடனான காங்கிரசின் உறவு வலுவாக உள்ளது. .கூடங்குளம் பிரச்சனையில் மத்திய அரசுக்கு முதலில் ஆதரவு அளித்த தி.மு.க பின்னர் பின்வாங்கிவிட்டது என்று நான் ஒருபோதும் கூறவில்லை. இது குறித்து நான் அளித்த பேட்டி திரித்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு கட்சிகளின் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது.
கூடங்குளம் அணுமின் திட்டத்தை செயல்படுத்த உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆகையால், அணு உலையைச் செயல்படுத்தும் பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கூடங்குளம் முதலாவது அணு உலையில் விரைவில் சோதனை ஓட்டம் தொடங்கும். 20 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன்பிறகு மின்சார உற்பத்தி தொடங்கும். இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதலாவது வாரத்திலோ மின் உற்பத்தி தொடங்கும். இம்மாத இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும்.
கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்ததற்காக சில மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்துக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் ஆதரவு அளிப்பதாக ஏற்கனவே கூறினோம். அதன்படி, ஒரு வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டு, அவரது நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். கூடங்குளம் அணு உலை அருகே முறையான கணக்கு இல்லாமல் செயல்பட்ட 6 தொண்டு நிறுவனங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
சட்டம்- ஒழுங்கு என்பது மாநில அரசு சம்பந்தப்பட்டது. கூடங்குளம் அணு உலைக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசின் ஆதரவு தேவை. திமுக ஆட்சியில் இருந்தபோது கூடங்குளம் விவகாரத்தில் எங்களுக்கு ஆதரவு அளித்தது. இப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக அரசும் ஆதரவு அளித்து வருகிறது. எனவே, இரு கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. இதைத் தான் நான் கூறினேன். ஆனால், நான் சொன்னதை திரித்து விட்டார்கள். திமுக- காங்கிரஸ் இடையே பிளவை ஏற்படுத்த எத்தனையோ பேர் முயன்று வருகிறார்கள். அதில் இதுவும் ஒன்று என்றார் நாராயணசாமி.












Click it and Unblock the Notifications