சோனியாவுக்கு தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி.க்கள் டிசம்பர் 9 வரை கெடு!
ஹைதராபாத்: தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தெலுங்கானா காங்கிரஸ் எம்.பி.க்கள் கெடு விதித்து கடிதம் அனுப்ப திட்டமிட்டிருக்கின்றனர்.
தெலுங்கானா பகுதி காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நேற்று இரவு அமைச்சர் ஜனா ரெட்டி வீட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெலுங்கானா விவகாரத்தில் உரிய முடிவு எடுக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கடிதம் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் 9-ந் தேதி வரை சோனியாவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அதன் பிறகு முக்கிய முடிவு எடுக்கலாம் என்றும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கேசவராவ், கட்டா சுகேந்தர் ரெட்டி, ஜகநாதம், பிரபாகர, விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தெலுங்கானா விவகாரத்தில் சாதகமான முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுக்காவிட்டால் நிச்சயம் தெலுங்கானா பகுதியில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி ஜெயிக்காது என்று இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒருமித்த குரலில் குமுறியிருக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்ளாதபோது தனிக் கட்சியைத் தொடங்கவும் தெலுங்கானா காங்கிரசார் திட்டமிட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. விவேக், தெலுங்கானா உருவாக்கப்படாவிட்டால் காங்கிரஸுக்கு வாய்ப்பே கிடையாது. தேர்தலுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் அமைக்காவிட்டால் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும். காங்கிரஸ் கட்சியைக் காப்பாற்ற தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications