வருடத்திற்கு 9 மானிய சிலிண்டர்கள்.. மத்திய அரசு முடிவு

சமீபத்தில் மத்திய அரசு வருடத்திற்கு 6 மானிய விலை சிலிண்டர்கள்தான் என்று அறிவித்து மக்கள் வயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டியது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டங்களும் நடந்தன. ஆனாலும் மத்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை. குறிப்பாக நிதியமைச்சராக உள்ள ப.சிதம்பரம், மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது, குறைக்கப்பட்டதுதான் என்று கண்டிஷனாகவும் பேசினார்.
இந்த நிலையில், சமீபத்தில் சூரஜ்கண்ட்டில் நடந்த காங்கிரஸ் கலந்தாலோசனைக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள், காங்கிரஸுக்கும், அரசுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவதாக வருத்தப்பட்டனர். மேலும் 6 சிலிண்டர் என்பதை 12 சிலிண்டர்களாக உயர்த்த வேண்டும் என்றும் பிரதமரை முன்னால் வைத்துக் கொண்டே மத்திய அரசுக்கு கோரிக்கையும் விடுத்தனர்.
ஆனால் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், 12 சிலிண்டர் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல், 9 சிலிண்டர் என்று சற்று இறங்கி வந்துள்ளது.
இந்த பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் வீரப்ப மொய்லி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டரின் எண்ணிக்கையை ஆறில் இருந்து 9 ஆக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
சீக்கிரமாக இதை 12 ஆக உயர்த்தப் பாருங்கள். இல்லாவிட்டால் காங்கிரஸுக்கும், மக்களுக்கும் இடையிலான இடைவெளியும் கூட தாறுமாறாக அதிகரித்து விட வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications