சென்னைக்கு பதிலா விழுப்புரத்தில் இறக்குங்க: எமிரேட்ஸ் விமானத்தில் பயணி ரகளை

துபாயில் இருந்து எமிரேட்ஸ் பயணிகள் விமானம் ஒன்று நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கியது. அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிவிட்ட நிலையில் ஒருவர் மட்டும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவரை எழுப்பினர்.
அசந்து தூங்கிய தன்னை எழுப்பியதால் எரிச்சலடைந்த அவர் சென்னையில் ஏன் விமானத்தை தரையிறக்கினீர்கள், விழுப்புரத்தில் இறக்குங்கள் என்று கூறினார். இதையடுத்து பணிப்பெண்கள் இது குறித்து விமானியிடம் தெரிவித்தனர். விமானி வந்து விசாரித்தபோது முரண்பாடாக பேசினார். இதனால் அவர் விமான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருக்குமோ என்று சந்தேகமடைந்த விமானி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அந்த ரகளை ஆசாமியை விமானத்தில் இருந்து இறக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் வேலு(28) என்றும், அவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. அச்சகத்தில் வேலை பார்க்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துபாய் சென்ற அவர் அமாவாசை தினத்தன்று மனநிலை பாதிக்கப்பட்டு ரகளை செய்து வந்துள்ளார். இதையடுத்து அந்நிறுவனம் அவரை ஊருக்கு திருப்பியனுப்பியது.
நேற்று அமாவாசை என்பதால் அவர் வழக்கம் போல் ரகளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்ததையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அதன் பிறகு அவரை வரவேற்க வந்த பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications