கசாப் மரணத்தை பட்டாசு வெடித்தும், வாழ்த்துக்கள் தெரிவித்தும் கொண்டாடும் மும்பை மக்கள்
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெறித் தாக்குதலை நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல் கசாப் மட்டுமே உயிருடன் பிடிபட்டான்.
இந்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம் கசாபுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை மும்பை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதையடுத்து கசாப் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினான். முதலில் அவனது தண்டனைக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம் அண்மையில் அவனது தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவன் ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்தான். அதுவும் நிராகரிக்கப்பட்டதையடுத்து கசாப் இன்று காலை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
கசாபை எப்பொழுது தூக்கிலிடுவார்கள் என்று இத்தனை நாட்களாக ஆவலாக எதிர்பார்த்த மும்பைவாசிகளுக்கு இந்த செய்தி இனிய செய்தியாக இருந்தது. கசாப் தூக்கிலிடப்பட்டதை கேட்டு மும்பை மக்கள் அதிலும் குறிப்பாக தென் மும்பையில் உள்ள முஸ்லிம்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து மும்பை மக்கள் கசாப் மரணத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.
மும்பையில் பிரபலமான டப்பாவாலாக்கள் கசாப் மரணச் செய்தி கேட்டு அவனது புகைப்படத்தை எரித்து தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியாவின் நம்பர் 1 எதிரி தூக்கிலிடப்பட்டான் என்று கூறி பெஸ்ட் பஸ்கள் மற்றும் உள்ளூர் ரயில்களில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications