தமிழக-கேரள எல்லையில் 50 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்
கொல்லம்: தமிழக-கேரள எல்லையில் சிக்கிய காரில் இருந்து 50 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழக-கேரள எல்லையில் கோவை அருகே உள்ளது வளையார். இங்கு கேரள அரசின் விற்பனை சோதனைச்சாவடி உள்ளது. இங்கு நள்ளிரவு 1 மணி அளவில் மின்னல் வேகத்தில் ஒரு கார் வந்தது. அப்போது சோதனைச்சாவடியில் இருந்த அதிகாரிகள் காரை நிறுத்துமாறு சைகை காட்டினார்கள். உடனே காரை டிரைவர் நிறுத்திவிட்டார்.
அதன் பிறகு காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது பின் இருக்கையில் ஒரு சூட்கேஸ் இருந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் 100 கிராம் எடையுள்ள 500 தங்கக் கட்டிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் காரில் உள்ளவர்களிடம் தங்கக் கட்டிகள் குறி்தது விசாரித்தனர். அதற்கு அவர்கள் மதுரையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து கொச்சியில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு தங்கக் கட்டிகளை கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர்.
உடனே அதிகாரிகள் அதற்கான ஆவணங்கள் காண்பிக்குமாறு கேட்டனர். அவர்கள் கொடுத்த ஆவணங்களை சரிபார்த்தபோது வங்கியின் பதிவு எண் முரணாக இருப்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களிடம் பல கேள்விகள் கேட்டபோது அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.
இதையடுத்து அதிகாரிகள் சூட்கேஸில் இருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் வந்த இருவரிடம் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications