26/11 கமாண்டோக்களை கண்டு கொள்ளாமல் விட்டோமா?: கெஜ்ரிவால் புகாருக்கு மத்திய அரசு விளக்கம்
டெல்லி: மும்பை மீதான 2008-ம் ஆண்டு தீவிரவாதிகளின் தாக்குதலின் போது சிறப்பாக கடமையாற்றிய கமாண்டோ படை வீரர்களை கண்டுகொள்ளவில்லை என்ற அர்விந்த் கெஜ்ரிவால் கோஷ்டியின் புகாரை மத்திய அரசு மிகக் கடுமையாக மறுத்துள்ளது. அத்துடன் கெஜ்ரிவால் கோஷ்டியில் இணைந்து புகார் தெரிவித்திருக்கும் முன்னாள் கமாண்டோ சுரேந்தர்சிங்குக்கும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரத்தையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், மும்பை தாக்குதலில் தீவிரவாதிகளை எதிர்த்து போராடிய கமாண்டோ வீரர்களை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கமாண்டோ வீரர்களில் ஒருவரான சுரேந்திர சிங்கிற்கு மத்திய அரசு ரூ.31 லட்சம் கொடுத்திருப்பதாக சொல்கிறது. அவர் பெற்றது வெறும் ரூ.2.5 லட்சம் தான். உண்மையில் சுரேந்தர் மாதம் ரூ.25 ஆயிரம் பெறுகிறார் என்பதை நிரூபிக்க முடியுமா? என்று சவால்விட்டிருந்தார்.
இதற்கு மத்திய அரசு மிக நீண்ட விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மும்பை தாக்குதலில் "ஆப்பரேஷன் ப்ளாக் டொர்னாடோ" என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நடவடிக்கையில் இருவர் வீரமரணமடைந்தனர். 17 அதிகாரிகள் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.
- வீரமரணமடைந்த மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் மற்றும் ஹவில்தார் கஜேந்தர் சிங் ஆகியோருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
- மேஜர் உன்னிகிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ1.3 கோடியும் ஒரு ஃப்ளாட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
- ஹவில்தார் கஜேந்தர்சிங் மனைவிக்கு ரூ1.27 கோடியும் ஒரு பெட்ரோல் பம்ப் மற்றும் ஒரு ஃப்ளாட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரது தாயாருக்கும் கூட ரூ15 லட்சம் வழங்கப்பட்டிருக்கிறது. இருவருக்குமே ஓய்வூதியத் தொகையும் அனுப்பப்பட்டு வருகிறது.
- படுகாயமடைந்தோருக்கு கீர்த்தி சக்ரா, சூர்ய சக்ரா, சேனா பதக்கங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
- இந்த ஆப்பரேஷனில் படுகாயமடைந்த 4 பேருக்கு தலா ரூ4.8 லட்சம் வழங்கப்பட்டது. லேசான காயமடைந்தோருக்கு தலா ரூ2.3 லட்சம் வழங்கப்பட்டது.
- தேசிய கமாண்டோ படையில் 2007-ம் ஆண்டு மே 9-ந் தேதி இணைந்தார். மும்பை ஆப்பரேஷனில் அவரது இடது காது கேட்கும் திறனை இழந்துவிட்டது. 2010-ம் ஆண்டு மே 8-ம் தேதியுடன் அவரது 3 ஆண்டுகால பணிக்காலம் நிறைவடைந்தது. இதன் பின்னர் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி வரை அவர் தேசிய கமாண்டோ படையில் இருந்துவிட்டு அவரது உடல்நலனைக் கருத்தில் கொண்டு அனுப்பி வைக்கப்பட்டார்.
- அவருக்கு ஓய்வூதியம் வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டதற்காகவும் தொகை வழங்கப்பட்டதுக் கிராஜூட்டியாக ரூ2,11,458ம், ஓய்வூதியமாக ரூ11,35,809ம், பி.எப். தொகையாக ரூ6,48,195-ம் வழங்கப்பட்டது. ராணுவத்தினரின் காப்பீட்டு நிதியாக ரூ1,13,849ம், இழப்பீடாக ரூ10 லட்சமும் செட்டில்மெண்ட் தொகையாக ரூ89, 705-ம் வழங்கப்பட்டது.குடும்ப நல நிதியாக ரூ10 ஆயிரமும் வழங்கப்பட்டது. அவரது உடல்நலக் குறைவுக்காக ரூ9 லட்சம் வழங்கப்பட்டது.
- ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ25,254ம் வழக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி ஹெல்த் ஸ்கீம் கார்டும் கூட அக்டோபர் 5-ந் தேதி அவரிடம் வழங்கப்பட்டும் இருக்கிறது.
- இதுமட்டுமின்றி சுரேந்தர்சிங்குக்கு ஏதேனும் இன்னமும் உதவி தேவைப்படுமாயின் அதனை பரிசீலிக்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தயாராகவே இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications