தேமுதிக மாநில பேச்சாளர் ஓட ஓட வெட்டிக் கொலை: சகோதரர்களுக்கு வலை
தூத்துக்குடி: உடன்குடி அருகே தேமுதிக மாநில பேச்சாளர் மெயின் பஜாரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்துள்ள தெற்கு மானாடு பகுதியைச் சேர்ந்தவர் நம்பி மகன் வெள்ளத்துரை. தேமுதிக மாநில பேச்சாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பசும்பொன்னில் நடந்த தாக்குதலை கண்டித்து மானாடு பகுதியில் சிலர் மறியல் நடத்த முயன்றனர். இதனை வெள்ளத்துரை தடுத்து நிறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெள்ளத்துரைக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் வெள்ளத்துரை மெஞ்ஞானபுரம் பஜார் பகுதியில் டீ குடிக்க வந்தார். பின்னர் அங்குள்ள கடை முன்பு நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த முருகையா மகன்கள் வெள்ளத்துரை, மாரிமுத்து ஆகியோர் அவரை அரிவாளால் வெட்டினர். இதையடுத்து வெள்ளத்துரை அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதை பார்த்ததும் பஜாரில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்ததும் மெஞ்ஞானபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடலைமுத்து, சூடாமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெள்ளத்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறி்த்து மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை நடத்தி தப்பி ஓடிய சகோதரர்களை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications