ஃபேஸ்புக் விவகாரம்: போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பால்கரில் சிவசேனா பந்த்
மும்பை: ஃபேஸ்புக்கில் சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதி சடங்குகள் நடந்த அன்று மும்பையில் நடந்த பந்த் குறித்து கமெண்ட் போட்ட பெண் மற்றும் அதற்கு லைக் கொடுத்த பெண்ணை கைது செய்த போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து பால்கரில் இன்று சிவசேனா சார்பில் பந்த் நடைபெற்று வருகிறது.
சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் இறுதி சடங்குகள் நடந்த அன்று மும்பையில் நடந்த பந்த் குறித்து ஷாஹீன் என்ற இளம்பெண் ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டிருந்தார். அதற்கு ரேணு சீனிவாசன் என்பவர் லைக் கொடுத்திருந்தார். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அந்த பெண்களை கைது செய்தது தொடர்பாக தானே எஸ்பி ரவீந்திர சென்காவ்ன்கர் மற்றும் பால்கர் மூத்த போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் பிங்க்லே ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை கண்டித்து சிவசேனா கட்சி பால்கரில் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. அதன்படி பால்கரில் உள்ள அனைத்து கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
இது குறித்து மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் கூறுகையில், அந்த பெண்களுக்கு எதிராக தவறான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்களுக்கு எதிராக இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியதில்லை என்றார்.
முன்னதாக பால்கரில் உள்ள ஷாஹீனின் உறவினரின் கிளினிக்கை சிவ சேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
