'ஸ்டிராங்கா'கிப் போன திமுக- காங். உறவு! 'வீக்கான' ஈவிகேஎஸ், கேப்டன்!
சென்னை: காங்கிரஸ் முகாமில் இருந்தாலும் பட்டும்படாமலும் ஒதுங்கிக் கொள்வது போல் மூலையில் ஓரமாக உட்கார்ந்து இருந்த திமுக இப்பொழுது நடுவீட்டில் நடுநாயகமாக கால்மேல் கால்போட்டு அமர்ந்து உள்ளது. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கான விவகாரத்தில் மத்திய அரசை ஆதரிக்கப் போவதாக திமுக அறிவித்த போது டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் முகம் பிரகாசித்தாலும் தமிழகத்து சில தலைவர்கள் முகம் ‘மின்வெட்டு' நிலைக்குப் போயிருப்பதை நிராகரிக்க முடியாது.

டெசோவில் உச்சகட்ட விரிசல்
ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரசோடு கரம் கோர்த்து ‘கறை' படிந்த கட்சியாக, தமிழகத்தில் துரோகக் கட்சியாக திமுகவை பலரும் முத்திரை குத்தி வைத்திருந்தனர். இந்தக் கறையை அகற்ற ‘டெசோ'மாநாட்டை திமுக நடத்தியது. ஆனால் காங்கிரஸ் இதை ரசிக்கவில்லை. தமிழீழம் என்பதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று பிரகடனப்படுத்தி திமுகவை நோகடித்தது காங்கிரஸ். திமுகவோ வேறுவழியே இல்லாமல் தமிழீழம் பற்றி தீர்மானம் போடாமல், பொத்தாம் பொதுவாக தீர்மானம் போட்டு ஏகடியத்துக்கு ஆளானது. இதனால் திமுக- காங்கிரஸ் இடையேயான உறவு உச்சகட்ட விரிசலைத் தொட்டது

அமைச்சரவை மாற்றம்...
அதன்பின்னர் மன்மோகன்சிங் தமது மத்திய அமைச்சரவையையே மாற்றி அமைத்தார். அதில் திமுகவுக்கும் பங்கு கொடுத்தாக வேண்டிய நிலையில் காங்கிரஸ் இருந்தது. திமுகவோ ராசா, தயாநிதி ஆகியோரது இடங்களை நிரப்ப விரும்பவில்லை. மிகவும் ஒதுங்கியே இருந்தது. அமைச்சரவை மாற்றத்தைப் பற்றி பெரிதாகக் கண்டு கொள்ளாமல் இருந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

அன்னிய முதலீட்டு விவகாரம்
சில்லறை வர்த்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்த விவகாரம் மன்மோகன்சிங் அரசையே கலகலக்க வைத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கழன்று கொண்டது. இதனால் சிறுபான்மை அரசானது மத்திய அரசு. இதில் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடிய சமாஜ்வாடி கட்சியும் கூட மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள வெறுப்பில் இருந்த திமுகவோ, மத்திய அரசுக்கு எதிரான நிலையையே கடைபிடித்தது. இதனால் திமுக, காங்கிரஸ் உறவு கேள்விக்குறியாகிப் போயிருந்தது.

எப்படி சமரசம் ஏற்பட்டது?
திமுக- காங்கிரஸ் உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருந்தது 2ஜிதான்! இதில் திமுகவை கழற்றிவிட்டது காங்கிரஸ்! இந்தக் கடுப்பில் இருந்த திமுகவை தாஜா செய்யத்தான் ஆர்.பி.சிங். மூலமாக ரூ1.76 லட்சம் கோடி இழப்பு என்பது மிகைப்படுத்தப்பட்டு என்று சொல்ல வைத்ததாம் காங்கிரஸ். இதில் சற்றே ஆறுதலாகிப் போனது திமுக! அத்துடன் தமிழகத்தில் எப்படியும் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் மத்திய அரசை ஆதரிக்கலாம் என்று முடிவு செய்யப் போய் இப்போது இருதரப்பு உறவும் ஸ்டிராங்கி, "ஞானதேசிகன் நெகிழ்ந்து போய் (கண்ணீர்தான் பாக்கி) அறிக்கை விடும் அளவுக்கு வந்துவிட்டது.

சைக்கிள் கேப்பில் நுழைந்த கேப்டனுக்கு ஷாக்!!
திமுக- காங்கிரஸ் உறவு கேள்விக்குறியாகி இருந்த நிலையில் தனியே தவித்துக் கொண்டிருக்கும் தேமுதிக, காங்கிரஸுடன் பேச்சுகளை நடத்திப் பார்த்தது. தேமுதிகவும் காங்கிரஸும் நெருக்கம் பாராட்டினாலும் 'யார் கேப்டன்' என்பதில் குழப்பம்! 'கேப்டன்' நான் தான் என்று விஜயகாந்த் சொல்ல ஆனால் எங்கள் தலைமையில்தான் கூட்டணி என்று காங்கிரஸ் சொல்ல.. லேசாக இந்த புதிய கப்பல் தடுமாறிக் கொண்டிருந்தது.. இந்த நிலையில்தான் அப்படி இப்படி என திமுகவை தாஜா செய்து சில்லறை வர்த்தகத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர்...
அதிமுக கைவிட்டுவிட்ட நிலையில் காங்கிரஸை தம் வசம் இழுத்து 'பில்ட் அப்' காட்ட முயற்சித்த கேப்டனுக்கு திமுகவின் நிலை' பக்'கென்றாகிவிட்டதாம்!

கலங்கிக் கிடக்கும் ஈவிகேஎஸ்!
கேப்டனைப் போல இன்னொருவர் கலங்கிக் கிடக்கிறார். அவர்தான் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். திமுக- காங்கிரஸ் கூட்டணியை எப்பாடுபட்டாவது உடைத்தாக வேண்டும் என்பதற்காக எல்லாமும் செய்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோருடனான மோதலில் சோனியாவிடம் கடுமையான அதிருப்திக்குள்ளாகிக் கிடக்கிறார். ஏற்கெனவே 2 மாதங்களாக சோனியாவின் அப்பாயின்மென்ட் கிடைக்காமல் வெயிட்டிங்கில் இருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தரப்போ, திமுக அரசை ஆதரிக்கும் என்று சொன்னதும் அப்ப இன்னும் எத்தனை மாதம் காத்திருக்கனுமோ சோனியாவின் அப்பாயின்மென்ட்டுக்கு என்றுதான் கருதியிருக்கக் கூடும்!












Click it and Unblock the Notifications