டேய் நீ என் தம்பிடா... ஆமாடா, நான் உன் அண்ணன்டா..!

அமெரிக்காவின் வாஷிங்டனில்தான் இந்த சுவாரஸ்யம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருபவர்கள் ஐசக் மற்றும் டகோடா. இருவரும் ஒருமுறை பள்ளிக்கூட நீச்சல்குளத்தில் சந்தித்து நண்பர்களானார்கள். ஆனால் முதல் பார்வையிலேயே அவர்களுக்குள் ஏதோ உறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தன்னைப் போலவே ஐசக் இருப்பதாக, நடப்பதாக, சிரிப்பதாக உணர்ந்துள்ளான் டகோடா. அதே உணர்வுதான் ஐசக்குக்கும் வந்துள்ளது. இந்த சந்தேகம் நாளுக்கு நாள் வளரவே, ஐசக் நேராக தனது தாயார் டான் நோல்டினை அணுகினான். என்னை நீங்கள் பெற்று வளர்த்தீர்களா அல்லது தத்தெடுத்தீர்களா என்று கேட்டான். இதைக் கேட்டும் ஐசக்கின் தாய்க்கு அதிர்ச்சியானது. ஏன் இப்படிக் கேட்கிறாய் என்று கேட்கவே இல்லை, எனது பள்ளியில் டகோடா என்று ஒருவன் இருக்கிறான். என்னைப் போலவே அவன் இருக்கிறான் என்று கூறியுள்ளான் ஐசக்.
இதையடுத்து கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது டானுக்கு. காரணம், உண்மையில் ஐசக் தத்தெடுக்கப்பட்டவன்தான். அவன் சந்தித்ததும் கூட அவனது கூடப் பிறந்த அண்ணனைத்தான். இதை ஐசக்கிடம் டான் சொன்னதும் அவனுக்குள் பெரும் சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம் பெருக்கெடுத்தது. நினைச்சேன் .. என்று கூறியபடி தனது அண்ணனைப் பார்க்க ஓடினான். அவனிடம் போய் நான் உன் தம்பி, நீ என் அண்ணன் என்று கூறியபோது டகோடாவுக்கும் ஆச்சரியம்.
டகோடா தனது பாட்டி வீட்டில் தனது சகோதரியுடன் வசித்து வருகிறான். பாட்டியிடம் போய் சொன்னபோது அவருக்கும் மகிழ்ச்சி.. ஆனால் ஐசக் தனது இன்னொரு பேரன் என்பது பாட்டிக்கு ஏற்கனவே தெரியுமாம்.
டகோடா, ஐசக்கின் உணமையான பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். டகோடாவின் தாயாரும், டானும் தோழியர் ஆவர். டகோடாவின் தாயார் ஐசக்கைப் பெற்றெடுத்தபோது டானும், அவரது கணவரும் பார்க்க வந்திருந்தனர். அப்போது படு அழகாக இருந்த ஐசக்கைப் பார்த்த டான், ஆசை கொண்டு நான் வளர்க்கட்டுமா இவனை என்று கேட்டுள்ளார். ஐசக்கின் தாயாரும் சரி என்று கூறவே ஐசக்கை, டான் தத்தெடுத்துக் கொண்டார்.
இருப்பினும் அண்ணனும், தம்பியும் ஒரே இடத்தில் வளரட்டும் என்று கருதி டகோடா படித்த பள்ளியிலேயே ஐசக்கையும் சேர்த்து விட்டார். இருவரும் சகோதரர்களாக இருந்தாலும் கூட அதை இரு வீட்டாரும் சொல்லிக் கொள்ளாமலேயே வளர்த்து வந்தனர். ஆனால் டகோடாவுக்கு மட்டும், உனக்கு ஒரு தம்பி உண்டு, அவனை தத்துக் கொடுத்து விட்டோம் என்று கூறி வைத்திருந்தனராம்.
நீச்சல் குளத்தில் நண்பர்களாக சந்தித்து கடைசியில் அன்புச் சகோதரர்களாக மாறிப் போய் விட்ட ஐசக், டகோடாவுடன், அவர்களது சகோதரியும் தற்போது பெரும் குஷியுடன் உள்ளாள்... ஒன்றுக்கு இரண்டு அண்ணன் கிடைத்தால் சந்தோஷம் வராதா என்ன...!












Click it and Unblock the Notifications