திராவிட இயக்கத்தின் வெற்றியை திரை போட்டு மறைக்கும் சட்டசபை வைர விழா: திமுக புறக்கணிப்பு- கருணாநிதி

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழா அழைப்பிதழ் கிடைத்தது. இந்தியக் குடியரசுத் தலைவரும், எனது நீண்ட கால நெருங்கிய நண்பரும், கழகத்தின்பாலும், தமிழகத்தின்பாலும், தமிழர்களின்பாலும் மிகுந்த அன்பும் அரவணைப்பும் காட்டுபவருமான பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, சென்னை உயர் நீதி மன்றத் தலைமை நீதிபதி, நீதியரசர் எம்.ஒய். இக்பால் ஆகியோர் கலந்துகொள்ளும் இந்த விழா சீரோடும் சிறப்போடும் நடந்திட; ஐம்பதாண்டுகளுக்கு மேலாக உறுப்பினராக, எதிர்க்கட்சித் துணைத்தலைவராக, எதிர்க் கட்சி தலைவராக, ஐந்துமுறை முதல்-அமைச்சராக இருந்து பணியாற்றியவன் என்ற முறையில் என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவிற்கான அழைப்பிதழை, திரு.மு.கருணாநிதி, சட்டமன்ற உறுப்பினர், கோபாலபுரம் என்று முகவரியிட்டு, அரசு சார்பில் யாரோ ஒருவர் கொண்டு வந்து என் வீட்டிலே கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். அழைப்பிதழைப் பார்த்தேன். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைரவிழா அழைப்பிதழ் என்றிருந்தது. ஆனால் 1997-ம் ஆண்டு திமுக ஆட்சி நடைபெற்றபோதே, 14.7.1997 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தின் பவள விழாவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் வைர விழாவும் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது இந்த விழாக்களை சிறப்பாகக் கொண்டாடுவதற்காக விழாக்குழு ஒன்று பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தலைமையில் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வைர விழாவிற்கு எந்தக் குழுவும் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
14.7.1997 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தலைமையில் என்னுடைய முன்னிலையில் விழா நடைபெற்றது. 85 வயதுக்கு மேற்பட்ட உறுப்பினர் என்ற பட்டியலில் லூர்தம்மாள் சைமன் (காங்.) மேடைக்கு வர இயலாமல் எதிரே அமர்ந்திருந்ததால், அவர் அமர்ந்திருந்த இடத்திற்கே நான் சென்று விருதினை வழங்கினேன்.
விழா சிறப்பாக நடக்கட்டும். அதைப் பற்றி நமக்கொன்றும் காழ்ப்பு இல்லை. ஆனால் திடீரென்று இந்த ஆட்சியில் இப்படியொரு வைர விழா கொண்டாடுவதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?
நான் குறிப்பிட்டுள்ளவாறு 1920-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய அரசியல் சீர்திருத்தச் சட்டப்படி சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்று, அந்தத் தேர்தலில் திராவிட இயக்கத்தின் வேர்க் கட்சியான நீதிக் கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையிலேதான் திமுக ஆட்சிக் காலத்தில் பவள விழா நடத்தப்பட்டது.
ஆனால் திராவிட இயக்கத்தின் வெற்றியையும், நீதிக்கட்சியின் வெற்றியையும் திரை போட்டு மறைக்கவும், மக்களைத் திசை திருப்பவும், அதற்குப் பிறகு தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்கி, அங்கே நிதிநிலை கூட்டத் தொடர் உட்பட ஒரு சில சட்டமன்றக் கூட்டத் தொடர்கள் நடைபெற்று, தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில் புதிய அத்தியாயம் நிலை பெற்ற பிறகும், தலைமைச் செயலகமும், சட்டப் பேரவையும் நிரந்தரமாக அங்கேயே அதாவது ஓமந்தூரார் வளாகத்திலேயே அமைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான், வைரவிழா வளைவு, வைர விழா போன்றவற்றை திடீரென்று நடத்த முற்பட்டுள்ளார்கள்.
திமுக ஆட்சியில் நடைபெற்ற வைர விழாவில், அவை முன்னவர் பேராசிரியர், எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன், மராட்டிய முன்னாள் ஆளுநர் சி.சுப்பிரமணியம், இந்திய குடியரசின் முன்னாள் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இப்போது நடைபெறும் விழாவில் அவை முன்னவருக்கோ, எதிர்க்கட்சித் தலைவருக்கோ உரையாற்றும் வாய்ப்பு இருப்பதாக அழைப்பிதழில் இல்லை. நவம்பர் 30-ந் தேதியன்று விழா நடைபெறப் போகிறது. நவம்பர் 27-ந் தேதிதான் சிறப்பு விருந்தினரான குடியரசுத் தலைவருக்கும், ஆளுநருக்கும் அழைப்பிதழே கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட விழாக்களை; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், ஆன்றோர்கள், சான்றோர்கள் எல்லாம் கலந்துகொள்ளக் கூடிய வகையில் இடவசதி உள்ள பொதுமன்றங்களில் நடத்துவதுதான் வழக்கம். திமுக ஆட்சியிலே நடைபெற்ற வைரவிழா, பவள விழாக்கள் கூட சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்தான் நடைபெற்றது. ஆனால் இப்போது சட்டமன்றப் பேரவைக் கூடத்திலேயே இட நெருக்கடிக்கிடையே விழாவினை நடத்துகிறார்கள். அதன் காரணமாக ஒரு சில மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தவிர மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கோ, முன்னாள் பேரவை உறுப்பினர்களுக்கோ அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை என்று ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
வைர விழாவில் முக்கியமான நிகழ்ச்சி, இதையொட்டி வைக்கவுள்ள வைரவிழா வளைவாகும். ஆனால் இந்த வளைவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் விழாவிலே இணைக்காமல், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை மட்டும் முன்கூட்டியே வைத்துக் கொண்டு, அந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதல்வரே நடத்தி முடித்து விட்டார். அந்த வளைவினையாவது கட்டி முடித்து, அதன் திறப்பு விழாவினையாவது குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிற நிகழ்ச்சியோடு நடத்தியிருக்கலாம்.
இந்த விழாவிற்காகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழிலும், அதன் கவரிலும் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம்தான் இருக்கிறதே தவிர, விழாவிற்கு முக்கிய விருந்தினர்களான குடியரசுத் தலைவரின் படமோ, ஆளுநரின் படமோ இடம் பெறவில்லை என்பதும் அதிமுக ஆட்சியில் அரசு மரபு இந்த அளவிற்குப் புறக்கணிக்கப்படுகிறது என்பதும் கண்டனத்திற்குரிய செய்தியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள்
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கருணாநிதி கூறுகையில், இந்த வைர விழாவில் திமுகவினர் கலந்து கொள்ள மாட்டார்கள். யாரையும் மதிக்காமல் நடைபெறுகின்ற விழா இது. எங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications