இந்தியப் பெருங்கடலில் சீனா- எதிராக கை கோர்க்கும் இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை அதிகரிப்பது என்பதுதான் இந்த மூன்று நாடுகளின் முதன்மை நோக்கம். இந்த மூவரணிக்கான தலைமை நாடாக ஆஸ்திரேலியா பொறுப்பேற்க இருக்கிறது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பரப்பு இந்தியப் பெருங்கடல். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டரீதியாக குடிபெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே நேரத்தில் இந்திய தொழிலாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.
இந்திய மாணவர்களின் பாதுகாப்பு, யுரேனியம் வழங்குதல் போன்ற இருநாடுகளிடையேயான பிரச்சனைக்குரிய விவகாரங்கள் இப்பொழுது தீர்க்கப்பட்டுவிட்ட நிலையில் உறவு மேலும் பலப்பட்டிருக்கிறது என்று ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அதிகாரி பீட்டர் வர்கீஸ் கூறியிருக்கிறார்.
கிழக்காசியா என்ற அமைப்பை முன்னிலைப்படுத்துவதைவிட இந்திய- பசிபிக் பிராந்தியம் என்ற நோக்கத்திலேயே இனி ஆஸ்திரேலியாவின் கொள்கைகளும் இருக்கும் என்பதால் அந்நாடு இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்திய-பசிபிக் பிராந்தியத்தைத்தான் தமது அடுத்த இலக்காக அமெரிக்கா நிர்ணயித்திருக்கும் நிலையில் அமெரிக்காவின் சார்பு நாடுகளாக இம்மூன்றும் மூவரணி கூட்டமைப்பை உருவாக்கியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் வலுவாக காலூன்றி வரும் அமெரிக்கா, இனிவரும் காலங்களில் சீனாவுக்கு செக் வைக்கக் கூடிய வகையில் இந்தியப் பெருங்கடலில்தான் தமது நடவடிக்கைகளை முடுக்கிவிடும் என்பதற்கு சான்றாகவே இம்மூவரணி உருவாக்கப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications