சேது திட்டம்: கூடுதல் கால அவகாசம் கோரும் மத்திய அரசு! பிப்.25-ல் இறுதி விசாரணை!
டெல்லி: சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மாற்று வழித்தடத்தில் செயல்படுத்துவது பொருளாதாரரீதியாக சாத்தியம் இல்லை என்ற சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்சௌரி குழு அறிக்கை மீதான கருத்தை தெரிவிக்க மீண்டும் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது மத்திய அரசு. இதனால் இந்த வழக்கின் இறுதி விசாரணை பிப்ரவர் 25-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சேது சமுத்திரத் திட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மறுத்தது. இதைத் தொடர்ந்து சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் பாதையில் 'ராமர்' பாலம் இருப்பதாகக் கூறி அதை புராதான சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தனித்தனியே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து பச்செளரி தலைமையில் ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
சேது சமுத்திரத் திட்டம் குறித்த பச்செளரி குழுவின் அறிக்கை கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சேதுக்கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது பொருளாதார ரீதியாக சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த அறிக்கை மீது மத்திய அரசு கருத்து தெரிவிக்க தொடர்ந்து கால அவகாசம் கோரி வருகிறது மத்திய அரசு. இதுவரை மூன்று முறை அவகாசம் கோரியிருக்கிறது. தமிழக அரசோ, சேது சமுத்திர திட்டமே தேவையில்லை என்று பதில் மனுவைத் தாக்கல்செய்துவிடது.
மத்திய அரசு தற்போதும் கால அவகாசம் கோரியுள்ளதால் இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 25-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications